அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரம்; எடப்பாடி பழனிசாமிக்கு விடுத்த அழைப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும் நிலையில் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்களான மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ., எஸ். ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ., பி. சத்தியபாமா ஆகிய 3 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

அதற்கு மறுநாள் அதிமுக அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அதன் தொடர்ச்சியாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது பதவிகளைத் துறந்தனர். அ.தி.மு.க.வில் இருந்து இதுவரை மொத்தம் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து அவர்கள் அனைவரும் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

மற்றொருபுறம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக அவர்கள் விளக்கம் அளித்திருந்தனர். அதனை தொடர்ந்து சத்தியபாமா மற்றும் ஜெயகுமார் ஆகியோர் சபாநாயகர் முன்பு நேரில் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளித்தனர். அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த விவகாரம் தொடர்பாக ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்தியபாமா ஆகிய 4 பேரும் ஜூலை 30ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ராஜினாமா செய்த 4 அதிமுக எம்.எல்.ஏக்களும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஆகஸ்ட் 4ஆம் தேதி ராஜினாமா செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்க சட்டப்பேரவைச் செயலர் அழைப்பு விடுத்துள்ளார். ஜூலை 30 அதாவது நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்த நிலையில், அந்த தேதி மாற்றப்பட்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என சட்டப்பேரவைச் செயலர் அழைப்பு விடுத்துள்ளார்.  

Source link