தமிழ் சினிமாவில் இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு, இசையில் கொடி கட்டி பறந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர்கள் இருவரும் இணைந்து மெல்ல திறந்தது கதவு என்ற படத்திற்கு இசையமைத்திருந்தனர், இந்த படத்தில் வரும் ஒரு பாடலை, எம்.எஸ்.வியின் பழைய பாடலை வைத்து உருவாக்குமாறு அவரிடமே இளையராஜா கூறியுள்ளார்.
கடந்த 1986-ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மெல்லத் திறந்தது கதவு’. இந்த படத்தில் மோகன், ராதா, அமலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் இசை என்றே சொல்லலாம். இந்த படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் – இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்திருந்தனர்.
படத்திற்கு வாலி, கங்கை அமரன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர், இதில், ஊரு சனம் தூங்கிருச்சு… ஊதக்காத்தும் அடிச்சிருச்சு’ , “குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா”, “தேடும் கண் பார்வை தவிக்க…”, “வா வெண்ணிலா… உன்னைத்தானே வானம் தேடுது”, “தில் தில் தில்… மனதில் ஒரு தல் தல் தல் காதல்” போன்ற பாடல்கள் இன்று வரையும் மறக்க முடியாத பாடலாக அமைந்துள்ளது. அதிலும், “வா வெண்ணிலா பாடல்’ கேட்க கேட்க இனிக்கும் பாடலாக இருக்கிறது.
இந்நிலையில், காலத்தால் அழியாத பாடலாக உள்ள “வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே” பாடல் எப்படி உருவானது என்பது குறித்து இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இளையராஜாவின் நிறைய பாடல்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் பாணியில் தான் இருக்கும். இந்த படத்திற்கு இசையமைக்கும்போது, எம்.எஸ்.வி ராஜா நீ டியூன் போடு என்றதும் இளையராஜா நீங்கள் டியூன் போடுங்கள் மற்றவை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதன்படி எம்.எஸ்.வி அனைத்து பாடல்களுக்கும் டியூன் போட, ஒரு பாடலுக்கு ரெப்ரன்ஸாக எம்.எஸ்.வி இசையமைத்த பழைய பாடலையே இளையராஜா கூறியுள்ளார். 1953-ம் ஆண்டு வெளியான ‘சண்டி ராணி’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ’வான் மீதிலே இன்ப தேன்மாரி பெய்யுதே’ பாடல் போன்று ஒரு பாடல் போட்டால் நன்றாக இருக்கும் என்று கேட்டுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட எம்.எஸ்.வி அதே டியூனை போடாமல், அதே மாதிரியான டியூனை போட்டு கொடுத்துள்ளார். அந்த பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
