ஜம்மு: ஜம்மு பல்கலையில், முதுகலை அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முகமது அலி

ஜம்மு: ஜம்மு பல்கலையில், முதுகலை அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முகமது அலி ஜின்னா குறித்த பாடம் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏ.பி.வி.பி., எனப்படும் அகில பாரதிய வித்யா பரிஷத் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.

யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள ஜம்மு பல்கலையில், புதிய தேசிய கல்வி கொள்கையின்படி, முதுகலை அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் புதிதாக சில பாடங்கள் சேர்க்கப்பட்டன.

அதில், ‘தேசமும் சிறுபான்மையினத்தவரும்’ என்ற பாடத்தில், நவீன இந்திய அரசியல் சிந்தனைகள் என்ற பகுதி சேர்க்கப்பட்டு உள்ளது. அதில், நம் அண்டை நாடான பாக்., முன்னாள் அதிபர் முகமது அலி ஜின்னா குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., நிர்வாகிகள், ஜம்மு பல்கலை வளாகத்தில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜின்னா குறித்த பாடத்தை உடனே நீக்கக்கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.

இது குறித்து, ஜம்மு பல்கலை நிர்வாகத்தினர் கூறியதாவது:

பல் கலை மானிய குழுவின் விதிகளுக்கு இணங்கவே இந்த பாடம் சேர்க்கப்பட்டது. ஜின்னா மட்டுமின்றி, விநாயக் தாமோதர் சாவர்க்கர், கோல்வால்கர், மஹாத்மா காந்தி, அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் படேல் ஆகியோர் குறித்தும் பாடத்தில் இடம் பெற்றுள்ளது .

ஜின்னா குறித்த பாடத்தை நீக்கினால் தேசிய தகுதி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link