சென்னை: 'ஓய்வூதியம் உயர்த்தி வழங்குவது குறித்த அறிவிப்பில், தி.மு.க., அரசு எங்களை திட்டமிட்டு

சென்னை: ‘ஓய்வூதியம் உயர்த்தி வழங்குவது குறித்த அறிவிப்பில், தி.மு.க., அரசு எங்களை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டது’ என, சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

‘சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கான ஓய்வூதியம், 2,000 ரூபாயிலிருந்து 3,400 ரூபாயாகவும், பணிக்கொடை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

‘ஈமச்சடங்கு செலவினமாக, 20,000 ரூபாய் வழங்கப்படும்’ என, கடந்த ஜன.,24ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதற்கான, அரசாணை, பிப்.,13ல் வெளியானது. இதனால், மார்ச் மாதம் முதல் உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் என, சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், சமூக நலத்துறை சார்பில், அரசாணை, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகாததால், ஓய்வூதியம் உயர்வில் இழுபறி ஏற்பட்டது.

தற்போது, தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு மட்டுமே, நிதி ஒதுக்க முடியும். புது திட்டங்களுக்கு, நிதி பெற முடியாது.

இதனால், ஓய்வூதியம் உயர்த்தப்படும் என தி.மு.க., அரசு, தங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக, சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:

கடந்த பிப்.,13ம் தேதி வெளியான அரசாணையில், தேதி குறிப்பிடவில்லை. இதனால், மார்ச் மாதம் வழக்கம் போல், 2,000 ரூபாய் தான் ஓய்வூதியம் கிடைத்தது.

இது குறித்து, சமூக நலத்துறையில் கேட்ட போது, வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிப்பதாக கூறினர்.

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் முடியும் வரை, ஓய்வூதியம் உயர்த்தப்படுவது சாத்தியமற்றது. தி.மு.க., அரசு எங்களை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Source link