புதுடில்லி: ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தடை விதிக்க பரிந்துரை செய்த, அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையத்திற்கு, 275 ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ராணுவ உயரதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம், உலகம் முழுதும் மத சுதந்திரத்தை கண்காணித்து, கொள்கை ரீதியாக அந்நாட்டு அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்குகிறது. இந்த ஆணையம், 2025க்கான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
பரிந்துரை
அதில், ‘இந்தியாவில் மத சுதந்திர அத்துமீறல்கள் நடக்கின்றன. இதனால், அந்நாட்டின் உளவு அமைப்பான, ‘ரா’ மற்றும் ஆர்.எஸ்.எஸ்., மீது தடை விதிக்க வேண்டும்’ என, பரிந்துரைத்திருந்தது.
இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து, 275 ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ராணுவ உயரதிகாரிகள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை:
அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையத்தின் அறிக்கை உள்நோக்கம் கொண்டது. இது, அந்த அமைப்பின் அறிவுசார் நிலையையும், தவறான கணக்கீடுகளையும் காட்டுகிறது.
ஆர்.எஸ்.எஸ்., சொத்துகளை முடக்குவது மற்றும் அதன் உறுப்பினர்களின் நடமாட்டத்திற்கு தடை விதிப்பது போன்ற பரிந்துரைகள் பாரபட்சமானவை.
உரிய ஆதாரங்கள் இல்லாமல் இந்திய நிறுவனங்களை சீர்குலைப்பதற்கான முயற்சி இது. இந்த அறிக்கையை தயாரித்தவர்களின் பின்னணி குறித்து அமெரிக்க அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
நம் நாடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு வலுவான நீதித்துறை மற்றும் பார்லி., கண்காணிப்பு உள்ளது. மத உரிமைகள் மீறப்பட்டால் அதை தட்டிக்கேட்க போதுமான சட்ட வழிகள் உள்ளன.
விரிசல்
ஆர்.எஸ்.எஸ்., போன்ற சமூக -கலாசார அமைப்புகள் தேச கட்டமைப்பிலும், சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகின்றன. விமர்சனங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, அவதுாறுகளாக இருக்கக்கூடாது.
இந்த தன்னிச்சையான அறிக்கை, இந்திய – -அமெரிக்க உறவுகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்த முனையும் சில மறைமுக சக்திகளின் வேலை.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த கூட்டறிக்கையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், ஹேமந்த் குப்தா, முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் ஓ.பி.ராவத், சுனில் அரோரா, முன்னாள் வெளியுறவு செயலர் கன்வல் சிபல் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுஉள்ளனர்.
