“எனக்கு உறக்கம் வரவில்லை, ரத்தம் கொதிக்கிறது”

மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவது குறித்து மாநிலங்களவையில் எம்.பி அன்புமணி ராமதாஸ் எழுதிய கேள்விக்கு மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் பூஷன் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்த கருத்து குறித்து, திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “அபத்தமான ஒரு ஆபத்தான ஸ்டேட்மென்ட்டை மத்திய ஜெல் சக்தி இணை அமைச்சர் கூறி இருக்கிறார். 2018 தீர்ப்பில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளதாக கூறி இருக்கிறார். இது என்ன ஆபத்து என கேட்டீர்கள் என்றால்? உச்ச நீதிமன்ற தீர்ப்பில் அங்கேயோ, இங்கேயோ எல்லாம் கழித்து விட்டு ஒரு சின்ன தகவலை மட்டும் எடுத்துப் பேசியிருக்கிறார். மத்திய அமைச்சருக்கு காவிரி விவகாரம் குறித்து அனைத்தும் தெரியாது என்று சொல்ல முடியாது அவருக்கு ஆலோசனை சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள். அவர் இவ்வளவு பெரிய தவறு செய்யக் கூடாது, இதற்கு எளியவன் ஆன நான் என்ன பதில் சொல்கிறேன் என்றால் என கூறியவர் 2018 நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ள சிலவற்றை வாசித்துக் காட்டினார்.

அப்போது நீர் மின் திட்டத்தை பரிசீலிக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கான எந்த நீர் ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவே அந்த திட்டம் ஏற்கப்படவில்லை என கருதப்பட வேண்டும். ஆகையால் தற்போது கர்நாடகா முன் வைக்கும் மேகதாது திட்டம் தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும், அதை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மேலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை திட்டத்தையும் வெளிப்படையாக மீறுவதாகும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் நீர் விநியோகத்தை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மேலும் இதில் அதிகாரங்கள் வரம் உடையவை என்பது தெளிவாகிறது. அதன் கடமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் அதை திருத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் செயல்படுத்துவது மட்டுமே என தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆக உச்ச நீதிமன்ற தீர்ப்பையே மதிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை தவிர மற்ற நீரை கர்நாடகா பயன்படுத்திக் கொள்ளலாம் என எங்கும் கூறவில்லை. இவ்வளவு தெளிவாக நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் எப்படி மத்திய இணை அமைச்சர் சொல்கிறார் என தெரியவில்லை. பெரிய பதவியில் இருக்கும் அமைச்சர் இப்படி தவறான செய்தியை வெளியிடுவது வருத்தத்திற்குரிய விஷயம். இந்த அரசு இதற்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்திற்கு இந்த விவகாரத்தை அரசு கொண்டு செல்ல வேண்டும்.

கர்நாடகத்தில் எந்த கட்சி எப்படி இருந்தாலும், யார் யாருக்கு எதிராக இருந்தாலும் அதை பற்றி கவலை இல்லை. ஆனால் காவேரி என்றால் எல்லோரும் ஒன்றாக இருக்கிறார்கள். இப்போது நான் சாதாரண குடிமகன்.  ஏதோ ஒரு காலத்தில் இந்த இலாகாவை பார்த்தவன் எனும் போது எனது மனம் துடித்ததால் இதை உங்களுக்கு சொல்கிறேன். மத்திய அரசுதான் இதை எதிர்க்க வேண்டும். தமிழ்நாடு முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு, பெங்களூருக்கு போவதை விட டெல்லிக்கு போக வேண்டியது தானே. இதில் கர்நாடக செய்யும் எல்லா தில்லுமுல்லுகளும் எனக்கு தெரியும். கர்நாடகா போய் பேசுவது மிகப்பெரிய ஆபத்து. இப்போது உள்ள முதலமைச்சர் நான் மத்திய அரசோடு ஒத்துப் போகிறேன் என்று சொல்கிறார். அப்படி சொல்பவர் இதை செய்தால் என்ன? தமிழ்நாடு இப்போது பாலைவனமாக ஆகி வருகிறது, ஒட்டுமொத்த கட்சிகள் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டைக் கேட்கக் கூடாது, இதை திசை திருப்பவே இந்த ஸ்டேட்மென்ட்டை முன்வைக்கிறார்கள்” என்று கூறினார்.

அதனை தொடர்ந்து, காவேரி மேலாண்மை கூட்டுக் குழுவின் 139 வது கூட்டத்தில் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு 3500 கன அடி திறக்க வேண்டும் எனக் கூறியிருந்த போதிலும் முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடகா நீர்வளத் துறை அமைச்சடுக்கு கூறி இருந்தது குறித்து கேட்டதற்கு, பதிலளித்த அவர், “இப்போது திறந்து என்ன பயன்? குருவை அனைத்தும் காய்ந்து போய்விட்டது, முதல்வர் என்ன பண்ண போகிறார் என தெரியவில்லை. இந்த ஸ்டேட்மெண்டை பார்த்த பிறகு எனக்கு பகல் தூக்கம் கூட வரவில்லை. இதை பார்த்த பிறகு எனது ரத்தம் கொதித்து போய்விட்டது. மியூச்சுவல் அக்ரிமெண்ட் கிடையாது என சொல்கிறார்களே என ஆதங்கம். இந்த அரசு இந்நேரம் துடிச்சி இருக்கணும், தளபதியா இருந்திருந்தால் இந்நேரம் என்னை டெல்லிக்கு விரட்டி இருப்பார். என்னை தூங்க விட்டு இருக்க மாட்டார். மத்திய அமைச்சர் கொடுத்த ஸ்டேட்மென்ட் தமிழ்நாடு அரசு மறுக்கனும், நீதிமன்ற உத்தரவை கொண்டு போய் பிரிவிலேஜ் போட வேண்டும். உண்மையை மறைக்கிறார் என பிரிவிலேஜ் போட்டு இருக்க வேண்டும். மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் எந்த கட்சியும் போக்கு காட்டக் கூடாது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, மக்கள் வயிற்று பிரச்சனை இது. மூத்தவர்களிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறி இருந்தரே என கேட்டதற்கு, “நான் ஒரு சாமானியன், அதுவும் தீய சக்தி கூட்டத்தின் பொதுச்செயலாளர் நான் என்னை போய் அவர் கூப்பிடுவாரா?” என்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது குறித்து கேட்டதற்கு, “இதைவிட கேவலம் கிடையாது. இதற்கு தமிழன் தலை குனிய வேண்டும். தமிழ்நாட்டில் வரலாற்றிலேயே கருப்பு அத்தியாயம் இது. மத்திய அரசு இந்த நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக வேறு ஒரு பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். இதை இந்த அரசு பயங்கரமாக எதிர்க்க வேண்டும். இந்த விவகாரத்தை கொஞ்சம் கூட விட்டு கொடுக்கக் கூடாது.  மேலும் காவிரி விவகாரத்தை இந்த அரசு லேசாக எடுத்தால் தமிழ்நாட்டை கொன்று விடுவார்கள். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டியது ஆளும் கட்சி தான், நாங்கள் அல்ல. நாங்கள் என்ன செய்தாலும் மத்திய அரசு, ஆளுங்கட்சி என்ன செய்கிறது என்பதை தான் பார்ப்பார்களே தவிர மற்றவர்கள் செய்வதை கண்டுகொள்ள மாட்டார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஜெயலலிதா இரண்டு முறை உண்ணாவிரதம் இருந்தார், அந்த உணர்வாவது இவர்களுக்கு இருக்க வேண்டும்” என்றார்.

அதனை தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நேற்றைக்கு தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏவால் செய்தியாளர்கள் தாக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, “முதல்வரே சொல்லி இருக்கிறார், ஒரு தவறு செய்தாலும் அவன் என் கட்சியாக இருந்தாலும் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுப்பேன் என்று’.. ஆனால் செய்திருப்பது அவருடைய எம்எல்ஏ. எனவே அந்த வார்த்தைகளை முதல்வரே நான் சமர்ப்பிக்கிறேன்” என்றார். முதல்வர் அலுவலக மாற்றம் குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர், “யாரோ ஜோசியக்காரன் சொன்னார்களாம் அக்னி மூலையில் இருப்பது ஓராண்டு இரண்டு ஆண்டில் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள். அதற்கு உயரமான இடத்தில் போய் குபேர மூலையில் அமர்ந்தால் கரெக்டா இருப்பீர்கள் சொன்னதாக கூறுகிறார்கள். தற்போது வென்றவன் சொல்வதெல்லாம் வேதமாக இருக்கிறது. அதற்கு இரண்டு பேர் விசில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டு போட்ட மக்களுக்கு இவை எல்லாம் சமர்ப்பணம்” என கையெடுத்து கும்பிட்டார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

Source link