இத்தாலி நாட்டின் சிசிலி (Sicily) பகுதியில் தனியாக சுற்றுலா சென்ற ஆஸ்திரேலிய பெண் ஒருவர், சில மணி நேர இடைவெளிக்குள் தன்னை இரு முறை கடத்த முயற்சி செய்யப்பட்டதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மெல்போர்னைச் சேர்ந்த 36 வயதான நிர்வாக அதிகாரி ஸ்டெஃபனி (Stephanie), என்பவர், தான் அடுத்தடுத்து 2 முறை கடத்தப்பட்ட சம்பவத்தில், தனது திகிலான அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நண்பர்களுடன் விடுமுறையை முடித்த பிறகு, இத்தாலியில் தனியாக தங்கியிருந்தபோதே இந்த சம்பவம் நடந்ததாக அவர் கூறியுள்ளார்.
அப்போது, இத்தாலியில் பிரபலமாக பேசப்படும் 1 யூரோ வீட்டுத் திட்டத்தில் (1 Euro House Scheme) வீடு வாங்குவதற்காக பார்க்க வந்த அவர், சிசிலியில் உள்ள லோ ஸ்டாக்னோன் (Lo Stagnone) பகுதியில் கைட் போர்டிங் (Kiteboarding) விளையாட்டிலும் ஈடுபட திட்டமிட்டிருந்தார். இதனிடையே, கைட் போர்டிங் ஆர்வலர்களுடன் நடைபெற்ற ஒரு சந்திப்பில் கலந்து கொண்ட பிறகு, அங்கிருந்த குழுவினர் வேறு இடத்துக்குச் செல்ல தயாராகியிருந்தனர்.
அப்போது அங்கு அறிமுகமான ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த ஒருவர், தானும் அதே இடத்திற்குச் செல்வதாகக் கூறியதால், அவரது காரில் ஸ்டெஃபனி பயணம் செய்ய சம்மதித்தார். ஆனால், அவர் கூறியபடி நடக்கவில்லை. மற்றவர்களின் வாகனங்களை விட்டு விலகி, அதிவேகமாக காரை ஓட்டத் தொடங்கியதாகவும், “காரை நிறுத்துங்கள்” என்று பலமுறை கேட்டும் அவர் கேட்கவில்லை என்றும் ஸ்டெஃபனி தெரிவித்துள்ளார்.
குறுகலான சாலைகளில் தொடர்ந்து வேகத்தை அதிகரித்தபடி ஓட்டியதால் அச்சமடைந்த அவர், தனது இருப்பிடத்தை (Live Location) உடனடியாக தனது கைட் போர்டிங் பயிற்சியாளருக்கு அனுப்பியதாக கூறினார். இதற்கிடையில், காரில் இருந்த மற்றொரு நபர், “குழுவில் உள்ள மற்றவர்கள் உங்கள் வீட்டிற்கு வருகிறார்களா?” என்று ஓட்டுநரிடம் கேட்டதாகவும், அதற்கு “வேறு யாரும் வரவில்லை” என்று அவர் பதிலளித்ததும் தனது பயம் மேலும் அதிகரித்ததாகவும் ஸ்டெஃபனி தெரிவித்துள்ளார்.
சுமார் 12 கிலோமீட்டர் தூரம் பயணித்த பிறகு, கார் ஒரு கேட் அமைக்கப்பட்ட தனியார் வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அப்போது காரின் கதவு பூட்டப்பட்டிருக்கிறதா என்று அமைதியாகச் சோதித்த ஸ்டெஃபனி, கார் நின்ற உடனே கதவைத் திறந்து வேகமாக ஓடிவிட்டார்.
யாராவது தன்னை துரத்தி வருகிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அருகில் சிறிது நேரம் பதுங்கியிருந்த அவர், பின்னர் பல கிலோமீட்டர்கள் நடந்து அருகிலுள்ள நகரத்திற்கு வந்துள்ளார். அங்கு பாதுகாப்பு காவலரிடம் மொழிபெயர்ப்பு செயலி (Translation App) உதவியுடன் தனது நிலையை விளக்கி உதவி கேட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பிறகு பாதுகாப்பு காவலர் தன்னை தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டதால், இனி பாதுகாப்பாக இருப்பேன் என்று ஸ்டெஃபனி நினைத்தார்.
ஆனால், வழியில் வாகனத்தை அமைதியான ஒரு குறுக்குச் சாலையில் நிறுத்திய அவர், தனது செல்போனை பயன்படுத்தி, “உன்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றால் பதிலாக நீ எனக்காக என்ன செய்வாய்?” என்று டைப் செய்து காட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதைக் கண்டதும் ஒரு நொடியும் தாமதிக்காமல் வாகனத்திலிருந்து இறங்கி மீண்டும் ஓடத் தொடங்கிய ஸ்டெஃபனி, அருகிலிருந்த திராட்சைத் தோட்டத்திற்குள் சென்று பதுங்கினார்.
பின்னர் பல மணி நேரம் நடந்தே தனது ஹோட்டலை அடைந்ததாக கூறினார்.
வழியில் வந்த அனைத்து வாகனங்களை பார்த்தும், மறைந்து கொண்டதாகவும், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் தனது பயணத்திற்கான ஆதாரம் இருக்க வேண்டும் என்பதற்காக வெண்டிங் மெஷின்களில் (Vending Machine) பானங்களை வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் தனது பிறந்த நாள் முழுவதும் அழுதபடியே இருந்ததாகவும், பின்னர் தனது கைட் போர்டிங் குழுவினரிடம் நடந்த அனைத்தையும் கூறியதாகவும் ஸ்டெஃபனி தெரிவித்துள்ளார்.
இந்த அனுபவம் தன்னை மிகவும் பாதித்திருந்தாலும், இதை வைத்து இத்தாலி அல்லது இத்தாலிய மக்களை குற்றம் சாட்ட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தன்னை காரில் அழைத்துச் சென்ற முதல் நபர் இத்தாலியர் அல்ல; ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவர் என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், இந்த சம்பவம் தனது எதிர்கால திட்டங்களை மாற்றியுள்ளதாக கூறியுள்ள ஸ்டெஃபனி இத்தாலியில் வீடு வாங்கும் தனது திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்திருப்பதாகவும், இனி அங்கு செல்ல வேண்டியிருந்தால் தனியாக அல்லாமல் யாராவது உடன் இருந்தால்தான் செல்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தனது அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம், தனியாக பயணம் செய்பவர்கள் எப்போதும் விழிப்புடன் இருந்து, தங்களின் பாதுகாப்புக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் ஸ்டெஃபனி கூறியுள்ளார்.
