அமைச்சர் ரமேஷ் நேரில் ஆய்வு
தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் திருப்பணிகளை அமைச்சர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்து வருகிறார். கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் இருப்பதாக புகார்கள் வந்த இடங்களில் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு, தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதால் பல தரப்பினரிடமிருந்து அவருக்கு பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன.
ஸ்ரீரங்கம் கோவிலில் ஷூ அணிந்து ஆய்வு
இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் நேரில் பார்வையிட்டார். அந்த ஆய்வின்போது அவர் காலில் ஷூ அணிந்தபடி கோவில் வளாகத்தில் இருந்ததாக கூறப்படும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவின. இதையடுத்து இந்த விவகாரம் சர்ச்சையாக மாறியுள்ளது.இந்த சம்பவம் குறித்து பல பக்தர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அமைச்சரின் செயலுக்கு பல இந்து அமைப்புகளும் கண்டனம்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோவில், வைணவ சமயத்தின் மிக முக்கிய புண்ணியத் தலங்களில் ஒன்றாகும். இத்தகைய புனிதமான இடத்தில் ஷூ அணிந்தபடி ஆய்வு மேற்கொண்டது பக்தர்களின் மனதை புண்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.அமைச்சரின் செயலுக்கு பல இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயல்
குறிப்பாக, இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், அமைச்சர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தி கோவில் வளாகத்திற்குள் ஷூ அணிந்து செல்வது இந்து சமய நம்பிக்கைகளையும் பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயல். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அமைச்சர் தனது செயலுக்கு விளக்கம் அளித்து, பக்தர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். மேலும், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகமும் இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தவெகவுக்கு நெருக்கடி
அதே நேரத்தில், பழனி கோவில் நில மோசடி விவகாரம் தொடர்பாகவும் அமைச்சர் ரமேஷ் மீது அரசியல் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்த சூழலில், ஸ்ரீரங்கம் கோவில் ஆய்வு தொடர்பான இந்த புதிய சர்ச்சையும் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அமைச்சர் அல்லது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த விவகாரத்தால் தவெகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
