திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் 5 கடைகளுக்கு சீல்; மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் தொடர்ந்து மாத வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த 5 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாகச் சீல் வைத்தனர். மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையத்துடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் ஒவ்வொன்றுக்கும் மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு மாதமும் வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வணிக வளாகத்தில் உள்ள 5 கடை உரிமையாளர்கள் கடந்த சில மாத காலமாக தொடர்ந்து வாடகை கட்டாமல் இழுத்து அடித்து வந்தனர்.இதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், நோட்டீஸ் அனுப்பப்பட்டும் கடை உரிமையாளர்கள் வாடகை பணத்தை கட்டாத காரணத்தால் இன்று மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் திருவரங்கம் உதவி கமிஷனர் சீனிவாசன் மேற்பார்வையில் மாநகராட்சி அதிகாரிகள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு சீல் வைத்து பூட்டினர். இதனால் சிறிது நேரம் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி

Source link