இந்த வழக்கு கடந்த 27ஆம் தேதிக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘கருணைப்படி பணி வழங்கும் பொழுது ஏற்கனவே கருணை பணி வழங்குவதில் பட்டியல் உள்ளது. அவற்றினை முறைப்படி பரிசீலித்து அதன் பின்னர்தான் பணி நிரந்தரம் செய்வார்கள். அரசு பேருந்து விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கினால், அல்லது அவர்கள் அரசு பணி கேட்டால் இவ்வாறு வழங்க முடியுமா? சிவகாசியில் அடிக்கடி வெடி விபத்துக்கள் நடக்கிறது. அவர்களும் அரசு பணி வேண்டும் எனக் கோரினால் என்ன செய்வது?
எனவே அரசு தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக கூறுவதை ஏற்க இயலாது. ஒருவேளை திறன் வளர் பயிற்சிகள் கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உதவலாமே?’’ என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்பட்ட அரசு வேலைக்கான பணி ஆணையை ரத்து’ செய்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அரசின் கொள்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் எனவே நீதிமன்றம் விதித்த இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
