பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அக்கட்சியின் பொதுச் செயலாளராக வடிவேல் இராவணனும், பொருளாளராக திலகபாமாவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
டாக்டர் ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், அவர் உடன் இணைந்து செயல்பட்டு வந்த பேராசிரியர் தீரன், பு.த.அருள்மொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் அன்புமணி முன்னிலையில் இணைந்து இந்த பொதுக் குழுவில் பங்கேற்றனர். பொதுக் குழுவில் பேசிய அன்புமணி,”காங்கிரஸ் கட்சியும் பி.ஜே.பி-யும் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரவிடாமல் சதி திட்டம் திட்டி வருகிறார்கள். அடிக்கல் நாட்டினால் போதும் வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் திட்டம் திட்டுகிறார்கள்.
இது சம்பந்தமாக தான் நான் அறிக்கை வெளியிட்டேன். உடனே இங்கே தமிழ்நாட்டில் புதிதாக வந்திருக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர் (மாணிக்கம் தாகூர் என பெயரை குறிப்பிடாமல்) சட்டை எல்லாம் மடித்து விட்டுக்கொண்டு ஆவேசமாக பேசுகிறார். நாங்கள் தூப்பக்கி சூட்டையே பார்த்து விட்டோம், தடியடியை பார்த்து விட்டோம், ஜெயில் எல்லாத்தையும் கூட பார்த்து விட்டோம் நீங்கள் அப்போது பிறந்து கூட இருக்க மாட்டீர்கள். அமைதியாக போய்க்கொண்டிருக்கிறோம. ஆக்கபூர்வமான அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.
பா.ம.க தனியாக நின்று எத்தனையோ சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியால் தனியாக நின்று ஒரு கவுன்சிலர் கூட வெற்றி பெற முடியாது. வரும் ஒன்றாம் தேதி ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வருகிறார் தமிழ்நாட்டுக்கு வரும் ராகுல் காந்தி தமிழ்நாட்டின் பக்கம் இருக்கும் நியாயத்தை பற்றி பேசுகிறாரா என்று பார்ப்போம்.” என்று தெரிவித்தார்.
மாணிக்கம் தாகூர் வீடியோ
இந்நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர், “அன்புமணியின் பேச்சை கேட்டேன், மிகவும் சிரிப்பாக இருந்தது. நீங்கள் (அன்புமணி) கேட்ட கேள்விக்கு மத்திய இணை அமைச்சர், ‘மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடிடம் அனுமதி பெற வேண்டாம்’ என பதில் கொடுத்துள்ளார்.
இதனை எதிர்த்து, பா.ஜ.க-வுக்கு நீங்கள் வழங்கி வரும் ஆதரவை திரும்ப பெறுவீர்களா? என்பதுதான் என் கேள்வி. அதற்கு ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறீர்கள்? சி.பி.ஐ. வழக்கு இருக்கிறது என பதட்டப்படுகிறீர்களா? காங்கிரஸை பற்றி நீங்கள் எப்படி பேசமுடியும்? நாமே (பா.ம.க) அ.தி.மு.க, பா.ஜ.க-விடம் தொங்கி அரசியல் செய்துக்கொண்டிருக்கிறோம். நான்கு எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெறுவதற்கு அ.தி.மு.க, பா.ஜ.க-விடம் கதை ஓட்டி அரசியல் செய்துகொண்டிருக்கிறீர்கள். அ.தி.மு.க புண்ணியத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரையும் பெற்றுவிட்டீர்கள்.
இந்திய அளவில் காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சி. மோடி அரசு மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என சொல்லியுள்ளது. இதனை எதிர்த்து மோடி அரசிடம் கேள்வி எழுப்பப்போகிறீர்களா? இதனை கண்டித்து இந்த அரசுக்கு கொடுத்திருக்கும் ஆதரவை திரும்ப பெற போகிறீர்களா? இதற்கு பதில் சொல்லுங்க?” என்று கேள்வி எழுப்பி அவர் விமர்சித்துள்ளார்.
