33 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி முதல்வரிடம் பெண்கள் கூட்டமைப்பு மனு

சென்னை: லோக்சபா மற்றும் சட்ட சபையிலும், பெண்களுக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தியும், சட்டசபை யில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற கோரியும், அனைத்து பெண்கள் கூட்டமைப்பினர், முதல்வர் விஜயிடம் மனு அளித்தனர்.

தலைமை செயலகத்தில், அனைத்து பெண்கள் கூட்டமைப்பினர், நேற்று முதல்வர் விஜயை நேரில் சந்தித்து பேசினர். அப்போது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அதன்பின் அவர்கள் அளித்த பேட்டி;

அரசியலில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை போன்றவற்றால், காலவரையறையின்றி தள்ளி போடப்பட்டுள்ளது.

லோக்சபா மற்றும் சட்டசபையில், பெண்களுக்கான 33 சதவீதம் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, தமிழக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம்.

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிப்பதாக, முதல்வர் தெரிவித்தார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர், நேற்று முதல்வர் விஜயை, தலைமை செயலகத்தில் சந்தித்தனர். அதன்பின் கூட்டமைப்பின் தலைவர் ஜேம்ஸ் அளித்த பேட்டி;

மின்சார நிலைக்கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி., வரிச்சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முதல்வரிடம் தெரிவித்தோம்.

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான, மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பது உட்பட, 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தோம். அவற்றை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link