சென்னை: ‘பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசாரே, வேட்டைக்காரர்களாக மாறக்கூடாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவி லுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, 26 வயது பெண், கடந்த 2025ம் ஆண்டு செப்., 29ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
சிறப்பு நீதிமன்றம்
இதில், திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
‘அவர்கள் மீதான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்; போக்சோ மற்றும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்களை தெரிவிக்க வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்ட பெண், பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை, இரண்டு மாதங்களில் முடிக்க, அனைத்து முயற்சிகளையும் முதன்மை அமர்வு நீதிமன்றங்கள், மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் எடுக்க வேண்டும்.
போலீஸ், அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க, இரவு ரோந்து பணிகளை ஆண்டுதோறும் தமிழக டி.ஜி.பி., மறுஆய்வு செய்ய வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணையை தேவையில்லாமல் தள்ளி வைக்கக் கூடாது என, அனைத்து நீதிமன்றங்களுக்கும், உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.
அறிக்கை தாக்கல்
வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட 30 நாட்களில், பாதிக்கப்பட்ட குழந்தையிடம் வாக்குமூலம் பதிவு செய்து, ஓராண்டில் விசாரணையை, ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றங்கள் முடிக்க வேண்டும்.
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசாரே வேட்டைக்காரர்களாக மாறும் நிகழ்வுகள் மீண்டும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாநிலம் முழுதும் ஆறு புதிய சிறப்பு நீதிமன்றங்களை தொடங்குவது குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டும். அதன் முன்னேற்றம் குறித்து, தலைமை பதிவாளர் இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
