பருவமழை ஏமாற்றிய நிலையிலும் சுற்றுலா தலங்களில் குவியும் கூட்டம்

சென்னை: தமிழகத்தில் வழக்கமாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள், சுற்றுலா துறையில் பருவமில்லாத காலம் என கருதப்படும்.

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் மற்றும் பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பிய சூழல் காரணமாக, இந்த காலகட்டத்தில் சுற்றுலா பயணியர் வருகை குறைவாகவே இருக்கும்.

இந்த ஆண்டு, அந்த வழக்கமான நிலை மாறி உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் மூன்று நாட்கள் வார இறுதி விடுமுறை வருவதால், தமிழகம் முழுதும் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை நோக்கி செல்ல, சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், ‘தமிழ்நாடு ஹோட்டல்’கள் மற்றும் தனியார் சொகுசு விடுதிகளில் முன்பதிவு தற்போதே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, குற்றாலம், ஏலகிரி மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு உணவக விடுதிகளில் அதிகளவில் அறைகள் நிரம்பி வருவதாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் கூறியதாவது: வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில், சுற்றுலா பயணியர் வருகை குறைவாகவே இருக்கும். இந்த ஆண்டு பருவமழை ஏமாற்றிய போதும் கூட, சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு கிடைக்கும் விடுமுறை நாட்களை கொண்டாட, பலரும் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன் காரணமாக, எங்கள் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் முன்பதிவு வேகம் அடைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link