ஹெச்.டி.எப்.சி., வங்கியின் 3 உயர் அதிகாரிகள் 'டிஸ்மிஸ்' பொய் : வாக்குறுதியில் கடன் பத்திர விற்பனை அம்பலம்

புதுடில்லி: பொய்யான வாக்குறுதிகள் அளித்து, கடன் பத்திரங்கள் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஹெச்.டி.எப்.சி., வங்கி, மூன்று முதுநிலை அதிகாரிகளை நிரந்தர பணிநீக்கம் செய்துள்ளது.

துபாயில் உள்ள ‘டி.ஐ.எப்.சி’ எனும் துபாய் சர்வதேச நிதி மையத்தில் உள்ள ஹெச்.டி.எப்.சி., கிளையில் பணியாற்றி வந்த சம்பத் குமார், ஹர்ஷ் குப்தா, பாயல் மாந்த்யன் ஆகிய அதிகாரிகள் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிரெடிட் சூயிஸ் வங்கியின் ஏ.டி.,1 பத்திரங்களை பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வாடிக்கையாளர்களிடம் அவர்கள் விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வங்கியின் உள் விசாரணையை அடுத்தே இம்முடிவை எடுக்க நேர்ந்ததாக ஹெச்.டி.எப்.சி., வங்கி கூறியுள்ளது.

வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தை அந்நாட்டு செலாவணியாகவே வைத்துக்கொள்ள அனுமதிக்கும் எப்.சி.என்.ஆர்., கணக்குகளில் இருந்த பணம், இவர்களின் ஆலோசனையின்படி, பஹ்ரைனில் உள்ள வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து, அபாயமிக்க ஏ.டி.,1 பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிரெ டிட் சூயிஸ் வங்கி நொடித்து போகவே, அதில் முதலீடு செய்தவர்களின் 1.88 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடன் பத்திரங்கள் செல்லாது என ஸ்விஸ் நீதிமன்றம் அறிவித்தது.

இதனால் முதலீட்டை இழந்த டிபாசிட்தாரர்கள் புகார் அளிக்கவே, துபாய் நிதி ஆணையம் விசாரணையில் இறங்கியது.

முறைகேடு நடந்திருப்பது உறுதியானவுடன், புதிதாக வாடிக்கையாளர்களை சேர்க்க ஹெச்.டி.எப்.சி.,யின் துபாய் கிளைக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த ஹெச்.டி.எப்.சி., தவறு செய்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்துள்ளது.

இவ்வங்கியின் தலைவர் அதானு சக்ரவர்த்தி, ‘வங்கியின் செயல்பாடுகள் என் அற நெறிகளுக்கு பொருந்தாமல் இருப்பதால் பதவி விலகுகிறேன்’ என்று கூறி ராஜினாமா செய்ததை தொடர்ந்து, இந்த பிரச்னையும் சேர்ந்து ஹெச்.டி.எப்.சி., வங்கிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link