உலகளாவிய வளர்ச்சி பாதையில் டி.சி.பி.எல்.,

டி.சி.பி.எல்., எனும் ‘டாடா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ்’ நிறுவனம், நுகர்வோர் பொருட்கள் துறையில் முன்னணி நிறுவனமாகவும், டாடா குழுமத்தின் முக்கிய அங்கமாகவும் உள்ளது. 2020ல், ‘டாடா கெமிக்கல்ஸ்’ நுகர்வோர் பிரிவு மற்றும் ‘டாடா குளோபல் பெவரேஜஸ்’ இணைப்பால் உருவான இந்நிறுவனம், குறுகிய காலத்திலேயே உணவு மற்றும் பானங்கள் துறையில் வளர்ச்சி கண்டுள்ளது. எப்.எம்.சி.ஜி., துறையில் பல முன்னணி பிராண்டுகளுடன், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறது.

பிராண்டு போர்ட்போலியோ அடிப்படை உணவுகள், பானங்கள் மற்றும் ஆரோக்கிய பொருட்கள் உள்ளிட்ட பல பிரிவுகளில் டி.சி.பி.எல்., வலுவான பிராண்டாக உள்ளது. ‘டாடா டீ, டெட்லி, டீ பிக்ஸ்’ ஆகியவற்றின் வாயிலாக, தேயிலை சந்தையில் முன்னிலை வகிக்கிறது. ‘டாடா சால்ட்’ இந்தியாவின் நம்பகமான உப்பு பிராண்டாக தொடர்கிறது. ‘டாடா சம்பன், சிங்ஸ் சீக்ரெட், ஸ்மித் & ஜோன்ஸ், ஆர்கானிக் இந்தியா’ போன்றவை, உணவுப் பிரிவில் வலுவை கூட்டுகின்றன. ‘டாடா சோல்புல்’ சிறுதானிய தயாரிப்புகளிலும், ‘நொரிஷ்கோ’ பிரீமியம் பானங்களிலும் நிறுவனத்தின் இருப்பை வலுப்படுத்துகின்றன. காபி பிரிவில் ‘டாடா ஸ்டார்பக்ஸ்’ முக்கிய பங்கு வகிக்கிறது.

சந்தையில் முன்னிலை டாடா சால்ட், இந்தியாவின் பிராண்டட் உப்பு சந்தையில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது; தேயிலையில் நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனமாக திகழ்கிறது. அமெரிக்காவில் ‘எய்ட் ஓ கிளாக் காபி’ விற்பனை அளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் கனடா தேயிலை சந்தைகளிலும் நிறுவனம் வலுவாக உள்ளது.

இந்தியாவில் இதன் வினியோக வலையமைப்பு 48 லட்சம் விற்பனை நிலையங்களை சென்றடைந்துள்ளது. இதை விரைவில் 50 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

வணிக பிரிவுகள் நிறுவனத்தின் வருவாய் நான்கு முக்கிய பிரிவுகளாக உள்ளன.

இந்திய உணவுப் பொருட்கள் – டாடா உப்பு மற்றும் ‘சம்பன்’ தயாரிப்புகள் வாயிலாக 32 சதவீதம் இந்த பிரிவில் இருந்து வருகிறது.

இந்திய பானங்கள் – தேயிலை, காபி மற்றும் நொரிஷ்கோ தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து 32 சதவீத வருவாய் கிடைக்கிறது.

சர்வதேச வணிகம் – இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா சந்தைகளில் இருந்து 26 சதவீத வருவாய் கிடைக்கிறது.

பிராண்டு அல்லாதவை & பிற – 10 சதவீத வருவாய் விவசாயம் மற்றும் பிற வணிகங்களில் இருந்து கிடைக்கிறது.

டாடா ஸ்டார்பக்ஸ், டி.சி.பி.எல்., உடன் 2012ம் ஆண்டு 50:50 கூட்டாண்மையில் இந்திய சந்தையில் நுழைந்த நிலையில், விரைவில் வரவேற்பைப் பெற்றது. 2023ம் நிதியாண்டில் முதல் முறையாக 1,000 கோடி ரூபாய் வருவாயை எட்டிய இந்நிறுவனம், தற்போது 81 நகரங்களில் 504 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 2028க்குள் 1,000 கிளைகளாக விரிவடைய இலக்கு நிர்ணயித்துள்ளது.

வளர்ச்சி வணிகங்கள் டாடா சம்பன் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில், 31 சதவீத வளர்ச்சி பெற்று, கடந்த 2024ல் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனையை கடந்துள்ளது. கேப்பிடல் புட்ஸ் கையகப்படுத்தலால் ‘சிங்ஸ் சீக்ரெட்’ மற்றும் ‘ஸ்மித் & ஜோன்ஸ்’ போன்ற பிராண்டுகளுடன் 200க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஏற்றுமதி சவால்கள் இருந்தாலும், எதிர்காலத்தில் 25 – 30 சதவீத வளர்ச்சி இலக்காக உள்ளது.

ஆர்கானிக் இந்தியா, 2024ல் கையகப்படுத்தப்பட்டு, இயற்கை உணவு மற்றும் மூலிகை பொருட்கள் துறையில் முன்னணியில் உள்ளது; இதன் வருவாயில் 40 சதவீதம் அமெரிக்காவிலிருந்து வருகிறது. டாடா சோல்புல் சிறுதானிய அடிப்படையிலான தயாரிப்புகளுடன் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனத்தை கையகப்படுத்திய பின்னர் வருவாயை 5 மடங்கு உயர்த்தியுள்ளது.

நொரிஷ்கோ நிறுவனம் 2024ல் இணைக்கப்பட்டு, பிரீமியம் பானங்கள் வணிகத்தில் செயல்படுகிறது. 2025ல் சவால்களை சந்தித்தபோதும், 2026ல் மீட்சி கண்டு, 25 சதவீதத்துக்கும் மேற்பட்ட வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

காலாண்டு முடிவுகள் 2025 – 26ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், மொத்த வருவாய் 15 சதவீதம் உயர்ந்து, 5,112 கோடி ரூபாயாக உள்ளது. டாடா உப்பு மற்றும் டாடா சம்பன் விற்பனை உயர்வே இதற்கு காரணம்.

இந்திய பானங்கள் பிரிவு 3 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. தேயிலை மூலப்பொருள் செலவு குறைவால் லாபம் மேம்பட்டது. ஆர்கானிக் இந்தியா மற்றும் கேப்பிடல் புட்ஸ் இணைந்து, 15 சதவீத வளர்ச்சி கண்டுள்ளன.

சர்வதேச வணிகம் நிலையான கரன்சியில் 11 சதவீத வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஸ்டார்பக்ஸ் வருவாய் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த காலாண்டில், 12 புதிய கிளைகள் துவங்கப்பட்டன. தேயிலை விலை குறைவால் மொத்த லாப வரம்பு, 170 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 42.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

எதிர்கால திட்டம் விற்பனை அளவை மையமாக கொண்ட புதிய வளர்ச்சி மாதிரியை நோக்கி செயல்பட்டு வருகிறது. டாடா சம்பன், சோல்புல், நொரிஷ்கோ மற்றும் ஆர்கானிக் இந்தியா ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி வணிகங்கள், தற்போது இந்திய வணிகத்தில் கிட்டத்தட்ட 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.

பாரம்பரிய தேயிலை மற்றும் உப்பு வணிகங்களின் நிலையான வருவாய் மற்றும் பணப்புழக்கத்தை பயன்படுத்தி, இந்த புதிய பிரிவுகளின் வளர்ச்சியை நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. சி.இ.ஓ., சுனில் டிசோசா தலைமையில், ‘கோ டூ மார்க்கெட்’ மாற்றங்களால் கிராமப்புற மற்றும் நவீன வர்த்தக சந்தைகளில் வினியோகத்தை வலுப்படுத்தி வருகிறது.

கேப்பிட்டல் அலகேஷன்: கேப்பிட்டல் புட்ஸ் மற்றும் ஆர்கானிக் இந்தியா கையகப்படுத்தலுக்காக வாங்கிய கடனை, ‘ரைட்ஸ் இஸ்யூ’ வாயிலாக திரட்டிய நிதியால் குறைத்ததால், இந்நிறுவனம் நிகர பணப்புழக்க நிலைக்கு மாறியுள்ளது. 2026ம் நிதியாண்டு 3ம் காலாண்டு முடிவில் 1,272 கோடி ரூபாய் ரொக்க கையிருப்பு உள்ளது. மேலும், நிகர லாபத்தின் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட தொகையை டிவிடெண்டாக வழங்கி வருகிறது.

பொறுப்பு துறப்பு

இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

Source link