Chennai News Today LIVE Updates: மேகதாது விவகாரம்: காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் அவசரக் கூட்டம் இன்று கூடுகிறது

Tamil Nadu News LIVE 

சென்னையில் இன்று (ஜூலை 30, 2026) பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) எரிபொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இன்றைய எரிபொருள் விலை நிலவரம் வருமாறு:

பெட்ரோல் (1 லிட்டர்): ரூ.107.77 

டீசல் (1 லிட்டர்): ரூ.99.55 

சிஎன்ஜி (1 கிலோ): ரூ.97.00 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், தலைநகர் சென்னையில் இன்றும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏதும் இல்லாததால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

உயிரைப் பணயம் வைத்து கன்றுக் குட்டியைக் காப்பாற்றிய நபர்: அசாம் வெள்ளத்தில் நெகிழ்ச்சி வீடியோ

அசாமில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பேரழிவை ஏற்படுத்தியுள்ள வெள்ளப் பெருக்கிற்கு இடையே, தனது கன்றுக்குட்டியை உயிரைப் பணயம் வைத்து மீட்டுள்ள நபரின் நெகிழ்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில், கழுத்தளவு நீரில் நின்று கொண்டு அந்த நபர் தனது செல்லக் கன்றுக்குட்டியைத் தோளில் சுமந்தபடி பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளார்.

தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் ஒரு வாயில்லா ஜீவனைக் காப்பாற்ற அந்த நபர் காட்டிய அசாத்திய துணிச்சலையும், மனிதநேயத்தையும் இணையவாசிகள் (நெட்டிசன்கள்) பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Video: Sun News

  • Jul 30, 2026 07:46 IST

    மேகதாது அணை: கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது காவிரி நதிநீர் ஆணையம்

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை (DPR) காவிரி நதிநீர் ஆணையம் திருப்பி அனுப்பியுள்ளது. ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) கேள்விக்கு அளித்த பதிலில் காவிரி நதிநீர் ஆணையம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

    சிவனசமுத்திரம் மின் உற்பத்தித் திட்டத்தையும் மேகதாது அணைத் திட்டத்தையும் இணைக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும், காவிரி ஆற்றின் நதிநீரை அதிக அளவில் பயன்படுத்தும் வகையில் இது அமைந்திருந்ததாலும் இந்தத் திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப உரிய திருத்தங்களை மேற்கொண்டு புதிய அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கர்நாடக அரசிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • Jul 30, 2026 07:45 IST

    மேகதாது விவகாரம்: காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் அவசரக் கூட்டம் இன்று கூடுகிறது

    காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அண கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலுவாக வலியுறுத்தி வரும் சூழலில், காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் (CWMA) அவசரக் கூட்டம் டெல்லியில் இன்று (ஜூலை 30) நடைபெறுகிறது.

    இந்த முக்கிய அவசரக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் நேரடியாகப் பங்கேற்கின்றனர்.

  • Jul 30, 2026 07:45 IST

    கரூர் பணி ஆணை ரத்து விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

    கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு சார்பில் கருணை அடிப்படையில் அரசு பணிக்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன.

    இந்த நியமனங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, விதிமுறைகளை மீறி பணி ஆணை வழங்கப்பட்டதாகக் கூறி அதை ரத்து செய்து உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

    “பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பணி ஆணை வழங்கியது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்ட நடவடிக்கை. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பதால், உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” எனத் தமிழ்நாடு அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

    இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Jul 30, 2026 07:44 IST

    சென்னை மாநகராட்சியில் நிலுவை சொத்துவரி செலுத்த ஜூலை 31 வரை அவகாசம்

    சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நிலுவையில் உள்ள சொத்துவரியை வசூலிப்பதற்காகத் தொடங்கப்பட்ட சிறப்பு முகாம்கள் ஜூலை 31-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகின்றன.

    கடந்த ஜூலை 3-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு முகாம்கள் மூலம் ஜூலை 29-ஆம் தேதி வரை மொத்தம் ரூ.157.39 கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பொதுமக்கள் தங்களின் நிலுவைச் சொத்துவரியை எளிதாகவும், கூடுதல் கட்டணங்கள் மற்றும் வட்டி இன்றிச் செலுத்துவதற்கும் வசதியாக இந்தச் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

  • Jul 30, 2026 07:43 IST

    வருமான வரி தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்

    2025–26ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நாளை (ஜூலை 31) முடிவடைகிறது. இதுவரை சுமார் 4.7 கோடி பேர் மட்டுமே தாக்கல் செய்துள்ள நிலையில், இறுதி நாளில் அதிக அளவிலான வரி செலுத்துவோர் பதிவு செய்யக் கூடும் என்பதால், கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதுவரை சுமார் 4.7 கோடி பேர் மட்டுமே தங்கள் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source link