‘நேர்ல வந்து பாத்தா தான் தெரியும்’: காவிரி விவகாரத்தில் விஜய்க்கு அழைப்பு விடுத்த டி.கே. சிவகுமார்

எழுதியவர்: அக்ரம் எம்

தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் (CWRC) உத்தரவை எதிர்த்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் (CWMA) மேல்முறையீடு செய்யப்போவதாக கர்நாடகா அறிவித்துள்ளது.

அதேநேரம், கர்நாடகாவில் உள்ள காவிரி ஆற்றுப் படுகையின் உண்மை நிலையை நேரில் வந்து பார்வையிடுமாறு தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார்..

புதன்கிழமை புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார்;

”காவிரி நீர் ஒழுங்குமுறைக்குழுவின் உத்தரவு குறித்து அட்வகேட் ஜெனரல், சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உயர்நிலைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து காவிரி நீர் மேலாண்மை வாரியத்தில் (CWMA) மேல்முறையீடு செய்வதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பெங்களூரு திரும்பியதும், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” என கூறினார்..

தமிழக முதல்வர் விஜய் விரைவில் கர்நாடகாவுக்கு வருகை தரவுள்ள நிலையில், அவரை நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறிய சிவகுமார்:

”முதல்வர் விஜய் நேரில் வரட்டும். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் என்ன நிலை இருக்கிறது என்பதை அவர் தனது கண்களால் பார்க்க வேண்டும். அவருக்காக ஹெலிகாப்டர் ஏற்பாடுகளை கர்நாடக அரசே செய்து தரும். உண்மை நிலையை பார்த்த பிறகு அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பார்ப்போம்,” என்றார்.

பின்னனி என்ன?

காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு (CWRC), தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடகாவிற்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ஆனால், கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் கடும் நீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா, மைசூர் உள்ளிட்ட காவிரிப் படுகை மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் அமைப்பினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆங்கிலத்தில் வாசிக்க

காவிரிப் படுகையில் உள்ள 4 முக்கிய அணைகளுக்கான நீர் வரத்து, கடந்த 30 ஆண்டுகளின் சராசரியை விட 66% குறைந்துள்ளது. தற்போதைய நீர் இருப்பு கர்நாடகாவின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவே போதுமானதாக இல்லை என்று அம்மாநில அரசு வாதிடுகிறது.

முன்னதாக தமிழ்நாடு வைத்திருந்த நீர் கோரிக்கையை தண்ணீர் பற்றாக்குறையை காரணம் காட்டி இரண்டு முறை காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு நிராகரித்தது. ஆனால் இப்போது திடீரென நீரை திறக்க உத்தரவிட்டுள்ளது. 

Source link