புதுடில்லி: தலைநகர் டில்லியில் செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியுடன், முதல்வர் ரேகா குப்தா நேற்று ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து, முதல்வர் ரேகா குப்தா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசிக்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது. பிரதமர் அழைப்பின் பேரில், அவரது இல்லத்தில் சந்தித்தேன். டில்லி அரசின் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். மேலும், செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்தார்.பிரதமர் மோடியின் விலைமதிப்பற்ற வழிகாட்டுதல்களை பெற்றேன்.
தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ஆலோசனைகளை வழங்கினார். டில்லியின் வளர்ச்சி மீது பிரதமர் மோடி கொண்டுள்ள தனித்துவமான பாசம் புதிய ஆற்றலையும் உத்வேகத்தையும் அளித்தது.
டில்லி அரசின் அனைத்துத் துறை சார்ந்த வளர்ச்சி குறித்து விரிவான ஆலோசனை செய்தோம். டில்லி மாநகரின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது குறித்து விரைந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
பிரதமர் மோடியின் திறமையான வழிகாட்டுதல் மற்றும் அவருடைய ஆதரவுடன், டில்லியை முன்னேற்றம், செழிப்பு மற்றும் நல்லாட்சி ஆகியவற்றின் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
