திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்கு சென்ற இஸ்லாமியர்கள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவிற்கு, ரம்ஜான் பண்டிகையான நேற்று, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த சென்றனர். மலை மீது செல்பவர்களின் பெயர், விபரம் ஆகியவற்றை வழக்கம்போல் பதிவு செய்ய, அடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முயன்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமியர்கள், ‘ஆண்டுதோறும் அமைதியான முறையில் தொழுகை நடத்துகிறோம். ரம்ஜான் நாளில் தடுத்து நிறுத்தி, ஒவ்வொருவராக அனுப்புவது சரியல்ல’ என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு, திருப்பரங்குன்றம் போலீஸ் உதவி கமிஷனர் சசி பிரியா, ”பெயர் பதிவு செய்து தான் மேலே அனுப்பப்படுகின்றனர். புதிய நடைமுறை ஏதும் இல்லை,” என்றார். இதையடுத்து, விபரங்களை பதிவு செய்துவிட்டு, மலை மீதேறி, நெல்லித்தோப்பு பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்தினர்.
