வாஷிங்டன்: அடுத்த 48 மணி நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் முழுமையாக திறக்க

வாஷிங்டன்: அடுத்த 48 மணி நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் முழுமையாக திறக்க வேண்டும்; இல்லை என்றால் ஈரானின் பல்வேறு மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போர், 20 நாட்களை கடந்துள்ளது. பதிலடி கொடுத்து வரும் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கி, உலக நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்து விட்டது.

இந்த ஜலசந்தி சர்வதேச அளவில் எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய நீர்வழிப் போக்குவரத்தாக திகழ்வதால், கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது ஈரானுக்கு 48 மணி நேரம் அதிபர் டிரம்ப் கெடு விதித்தார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ” அடுத்த 48 மணி நேரத்திற்குள், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி, முழுமையாகத் திறந்து விடாவிட்டால், அமெரிக்க ஐக்கிய நாடுகள் அந்நாட்டின் பல்வேறு மின் நிலையங்களைத் தாக்கி அழிக்கும்; அதிலும், மிகப்பெரிய மின் நிலையத்தையே முதலில் தாக்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் அதிபர் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்கா ஈரானை வரைபடத்திலிருந்தே துடைத்தெறிந்துவிட்டது; அப்படியிருந்தும், அவர்களின் முக்கியத்துவமற்ற ஆய்வாளர் டேவிட் சாங்கர், நான் எனக்கான இலக்குகளை எட்டவில்லை என்று கூறுகிறார். இல்லை, நான் அவற்றை எட்டிவிட்டேன்; அதுவும் திட்டமிடப்பட்ட காலக்கெடுவிற்குப் பல வாரங்களுக்கு முன்னதாகவே அடைந்துள்ளோம்.

அவர்களின் தலைமைத்துவம் வீழ்ந்துவிட்டது; அவர்களின் கடற்படையும் விமானப்படையும் செயலிழந்துவிட்டன; அவர்களிடம் தற்காப்புக்கு என்று எதுவுமே இல்லை; இந்நிலையில் அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் நான் விரும்பவில்லை.

நாங்கள் திட்டமிடப்பட்ட காலக்கெடுவிற்குப் பல வாரங்களுக்கு முன்னதாகவே இருக்கிறோம். என்னைப்பற்றிய அவர்களின் தவறான கணிப்பை போலவே, தோல்வியடைந்துவரும் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் எப்போதும் எதையும் தவறாகவே புரிந்துகொள்கிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Source link