சென்னை: திமுக – மார்க்சிஸ்ட் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. 5

சென்னை: திமுக – மார்க்சிஸ்ட் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. 5 தொகுதிகளை ஏற்கும்படி திமுகவும், 6 தொகுதி கொடுத்தே ஆக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியும் கூறுவதால், உடன்பாடு ஏற்படவில்லை.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் சந்தித்து பேசினார். பிறகு நிருபர்களிடம் சண்முகம் கூறியதாவது: கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்து இருக்கும் நிலையில், எங்களது மாநில குழு 6 தொகுதிகளுக்கு மேல் என்று வற்புறுத்த வேண்டாம், கடந்த 2021ல் போட்டியிட்ட 6 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை பெற வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், ‘பெரிய அணி, அதிகமாக கட்சிகள் இருக்கிறது’ என்று கூறி, தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இருக்கும் சிரமங்களை பகிர்ந்து கொண்டார்.

5 தொகுதிகள் ஏற்றுக்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். 5 தொகுதிகள் என்பதை ஏற்றுக்கொள்வது குறித்து உடனடியாக முடிவுக்கு வருவது சிரமம் என்று சொல்லி இருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் கமிட்டியிடம் பேசிவிட்டு சொல்லுமாறும், ‘சாதகமான முடிவை எடுக்க வேண்டும். இது தேர்தலை ஒற்றுமையாக சந்திப்பதற்கு பயன்படும்’ என்றும் வலியுறுத்தினார். மாநில குழுவில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்திய 5 தொகுதி குறித்து விவாதித்து உரிய முடிவு எடுத்து பதில் அனுப்புவதாக சொல்லி இருக்கிறோம்.

மாலையோ, நாளையோ கூட்டம் நடத்தி முடிவுகளை அறிவிப்போம். முதலில் நம்பரை முடிவு செய்வோம். பிறகு தொகுதி பட்டியலை கொடுப்போம். கொள்கைப் பூர்வமாக தீர்மானத்தின் அடிப்படையில் திமுக அணியில் நாங்கள் நீடிக்கிறோம். எத்தனை தொகுதிகள் கொடுக்கிறார்கள்? என்பதை பொறுத்து இந்த அணியில் நீடிக்கலாமா வேண்டாமா? என்று முடிவு செய்வதல்ல மார்க்சிஸ்ட் கட்சி. இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.

Source link