சென்னை: ‘பொறுப்பு இருந்தால் தான் செயல்பட முடியும். ஆதரவாளர்கள் மட்டுமல்ல நானும் ஆதங்கத்தில் தான் இருக்கிறேன் என்று சரத்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலில், தமிழக பா.ஜ., மூத்த தலைவரும் நடிகருமான சரத்குமார், இன்று தன் ஆதரவாளர்களுடன், அவசர ஆலோசனை நடத்தினார். பிறகு நிருபர்களிடம் சரத்குமார் கூறியதாவது: 30 ஆண்டுகளாக என்னுடன் பயணித்தவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பாஜவில் எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படாதது என்ற அவர்களின் கேள்விக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
கடிதம் எழுத…
பாஜவில் பொறுப்பு வழங்காததால் எனக்கும் ஆதங்கம் உள்ளது. இது குறித்து மாநில தலைவர் மற்றும் தேசிய தலைமைக்கு கடிதம் எழுதவுள்ளேன். உங்களின் அருமையும், பெருமையும், அறிவும், ஆற்றலும் தெரிய வந்த பிறகும் கட்சிப்பொறுப்பு வழங்காத ஏன்? என ஆதரவாளர்கள் என்னிடம் கேட்கின்றனர். திருச்சி பொதுக்கூட்ட மேடையில் உங்கள் போட்டோ கூட இல்லை என ஆதரவாளர்கள் ஆதங்கப்பட்டனர். பொறுப்பு இருந்தால் தான் கட்சியில் செயல்பட முடியும்.
மீண்டும் கட்சி
ஒரு உறுப்பினராக என்னால் செயல்பட முடியாது. இதனை ஆதங்கமாக சொல்கிறேன். ஏன் மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்க கூடாது என்பதையும் ஆதரவாளர்கள் பதிவு செய்தார்கள். கார் ஓட்ட லைசென்ஸ் உள்ள ஒருவரை கார் ஓட்டக் கூடாது என கூறுவது போல் எனக்கு பொறுப்பு வழங்காமல் உள்ளனர். பாஜ தலைமை கண்டிப்பாக என் கோரிக்கைக்கு செவி சாய்த்தே ஆக வேண்டும். இவ்வாறு சரத்குமார் கூறினார்.
