மதுரை: பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க பிப்., 28ல் மதுரை வரும் பிரதமர் மோடி, மதுரை, தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற உள்ளன.
மதுரை, தோப்பூரில், அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் உள்ள, 220 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக, 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மொத்தம், 2,021.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரு பிரிவுகளாக எயம்ஸ் மருத்துவமனை கட்டடங்களை கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதில், 1,118 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில், 33 மாதங்களில் கட்டுமானம் கட்ட, ‘எல் அண்ட் டி’ நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.
முதற்கட்ட பணிகள், 18 மாதங்களில் நிறைவு பெறும் என, எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ், 2024 ஆகஸ்டில் தெரிவித்திருந்தார். பிப்ரவரியுடன், 18 மாதங்கள் முடியும் நிலையில், திட்டமிட்டபடி முதற்கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.முதல் பிரிவாக மருத்துவக் கல்லுாரி, விடுதி வளாகம், புறநோயாளிகள் பிரிவு, கேன்டீன், நர்சிங் கல்லுாரி, 150 படுக்கை வசதி கொண்ட தொற்று நோய்ப்பிரிவு உள்ளிட்ட கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர்கள் சேர்க்கை நான்காண்டுகளாக நடத்தப்பட்டு, தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரியில், 200 மாணவர்கள் படிக்கின்றனர்.இம்மாணவர்கள் மார்ச் முதல், மதுரை எய்ம்ஸ் வளாகத்தில் தங்கி படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புறநோயாளிகள் பிரிவும் துவங்கப்பட்டுள்ளதால், நான்காம் ஆண்டு படித்து முடிக்கும் மாணவர்கள், இங்கேயே, ‘ஹவுஸ் சர்ஜன்’ பயிற்சி பெறுவதற்கும் வாய்ப்புள்ளது.
முதற்கட்ட கட்டுமானம் நிறைவடைந்த நிலையில், பிப்., 28ல் பா.ஜ., தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க மதுரை வரும் பிரதமர் மோடி, தனி நிகழ்ச்சியில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற உள்ளன.
