AC: ஏசி வாங்குறீங்களா? – 1 Ton, 1.5 Ton, 2 Ton… யாருக்கு எது பெஸ்ட்? – EB Billஐ எப்படி குறைப்பது?

இதோ கோடை வந்துவிட்டது. வெளியில் சென்றால் மட்டுமல்ல நிழலில் இருந்தாலும் வியர்வையில் குளித்து விடுவோம். கோடையின் உக்கிரத்தை தணிக்க மலை வாசஸ்தலங்களுக்கு நம்மில் பலரும் படையெடுத்தாலும், நிரந்தரமாக நாம் வாழும் இடத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு வெப்ப வெக்கையில் வெந்து வாழும் சூழலே நிலவுகிறது.

நம்மில் பலருக்கும் ஏசி வாங்குவது என்பது ஒரு பெரிய கனவாகவும், அதே சமயம் ஒரு குழப்பமான விஷயமாகவும் இருக்கிறது. சந்தையில் விதவிதமான பிராண்டுகள், பல்வேறு தொழில்நுட்பங்கள் இருக்கும்போது எதைத் தேர்ந்தெடுப்பது என்ற தயக்கம் நம் எல்லோருக்கும் உண்டு.

ஏசி வாங்குவதற்கு கடைக்குச் செல்லும்போது பொதுவாக கவனிக்க வேண்டியவை என்னென்ன? இதுகுறித்து தமிழகத்தின் முன்னணி மின்சாதன விற்பனை நிறுவனத்தின் பிராண்டிங் துறையில் ஒரு விளம்பர வடிவமைப்பாளராகப் பணியாற்றி வரும் கணேசன் கூறுவது என்ன..?

நமது அறையின் அளவிற்கு எந்த எடைக் கணக்கு கொண்ட ஏசி பொருந்தும் என்பதைத் தீர்மானிப்பது மிக முக்கியமானது. ஒரு டன்னா, ஒன்றரை டன்னா அல்லது இரண்டு டன்னா என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். ரூம் சைஸ் எனப்படும் அறையின் பரப்பளவுதான் இதில் முதன்மையானது. பலரும் செய்யும் தவறு என்னவென்றால், பத்துக்கு பத்து அளவுள்ள நூறு சதுர அடி கொண்ட ஒரு சிறிய அறைக்கு ஒன்றரை டன் ஏசியை வாங்கிப் போடுவார்கள்.

உண்மையில் நூறு சதுர அடி கொண்ட அறைக்கு ஒரு டன் ஏசியே தாராளமாகப் போதுமானது. உங்கள் அறை நூற்று ஐம்பது சதுர அடி வரை, அதாவது பத்துக்கு பதினைந்து அடி வரை இருந்தால் மட்டுமே ஒன்றரை டன் ஏசியைத் தேர்வு செய்ய வேண்டும்.

அதற்கும் மேலான பெரிய அறைகளுக்கோ அல்லது பெரிய வரவேற்பு அறைகளுக்கோ சென்றால் இரண்டு டன் ஏசி வாங்குவதுதான் சிறந்தது. எனவே, உங்கள் தேவையைத் தாண்டி அதிக எடைக் கணக்கு கொண்ட ஏசியை வாங்கிப் பணத்தையும் மின்சாரத்தையும் வீணாக்காதீர்கள்.

இன்றைய காலகட்டத்தில் மின்சாரக் கட்டணம் என்பது நமக்கெல்லாம் ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. அதைச் சமாளிக்க இன்வெர்ட்டர் மற்றும் நான்-இன்வெர்ட்டர்

(Non-Inverter) தொழில்நுட்பங்களுக்கு இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் உள்ளூர் மெக்கானிக்குகளிடம் கேட்டால், அவர்கள் பழைய பாணி நான்-இன்வெர்ட்டர் ஏசிகளைப் பரிந்துரைக்கலாம், ஆனால் நவீனத் தொழில்நுட்பம் என்பது இன்வெர்ட்டர் ஏசிகளில்தான் இருக்கிறது.

இன்வெர்ட்டர் என்பது மோட்டார் சுழல்வதற்கான மின் நுகர்வைக் குறைக்கும் ஒரு மின்னணு முறையாகும். இது டிஜிட்டல் முறையில் மின்னணுப் பலகைகள், மின் தேக்கிகள் மற்றும் மின் கடத்திகள் போன்ற பாகங்களைப் பயன்படுத்தி இயங்குகிறது

இன்வெர்ட்டர் ஏசிகளில் நீங்கள் ஒரு வெப்பநிலையை, உதாரணமாக 24 டிகிரி என்று அமைத்துவிட்டால், அறை அந்த நிலையை அடைந்தவுடன் வெளிப்புற இயந்திரம் தானாகவே நின்றுவிடும். அறையின் வெப்பநிலை ஒரு நூல் அளவு மாறினாலும், அதாவது 24.2 டிகிரிக்கு உயர்ந்தாலும் சென்சார்கள் மூலம் அதை உணர்ந்து மீண்டும் இயங்கத் தொடங்கும்.

இது இயந்திரத்தின் ஆயுளைக் கூட்டுகிறது. நான்-இன்வெர்ட்டர் ஏசிகள் கட்-ஆப் ஆகாமல் ஓடுவதால் சுவர்கள் கூட மிக அதிகமாகக் குளிர்ச்சியாகி விடும். ஆனால் இன்வெர்ட்டர் ஏசி வெப்பநிலையைச் சரியாகப் பராமரிக்கும்.

Source link