சென்னை: திமுகவுடன் தொகுதிகளை பெறுவதில் இழுபறி நீடிக்கும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்

சென்னை: திமுகவுடன் தொகுதிகளை பெறுவதில் இழுபறி நீடிக்கும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கலந்தாய்வுக் கூட்டம் நாளை நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் நாளையே ஆலோசனை நடத்துகிறது.

எதிர்முகாமில் இருந்து எதிர்பாராத தருணத்தில் இணைந்த தேமுதிகவின் வரவு, காங்கிரசுக்கு கூடுதலாக 3 தொகுதிகள் ஒதுக்கீடு திமுக கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம்… பல ஆண்டுகளாக கூட்டணியில் உடன் பயணித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூ, கடந்த முறை கொடுத்த தொகுதிகளையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியானது கூடுதல் தொகுதிகள் தருமாறும் திமுகவை விடாமல் கேட்டு வருகின்றன.

புதிய கட்சிகள் வரவால் நாங்களும் தொகுதிகளை குறைத்திருக்கிறோம், நீங்கள் குறைத்துக் கொள்ளுங்கள் என்று திமுக தலைமை கூறி பலசுற்று பேச்சு நடத்தியது. ஆனாலும், மார்க்சிஸ்ட் கம்யூ, மற்றும் விடுதலை சிறுத்தைகள் இடையே தொகுதிகள் எத்தனை, உடன்பாடு கையெழுத்து போன்றவை இன்னமும் கைகூடாமல் உள்ளது. கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும் இத்தகைய இழுபறி திமுகவுக்கு பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சமாதானப்படுத்த முயன்ற வைகோவின் முயற்சியும் பலன் அளிக்க வில்லை. தொகுதி பங்கீடு குறித்து நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறது. அதே நாளில் விடுதலை சிறுத்தைகளும் கட்சியின் உயர்நிலைக்குழுக் கலந்தாய்வுக் கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், தேர்தல் அறிக்கை வெளியிடுவது உள்ளிட்ட தேர்தல் பணிகள், விசிகவுக்கான வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைத் தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக கூட்டணியில் தற்போது வரை இடம்பெற்று வரும் இவ்விரு கட்சிகள் நாளை (மார்ச். 23) அறிவித்து உள்ள கூட்டம், அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுக கூட்டணியில் இடம்பெற்ற வன்னியர் சமூக மக்களின் ஆதரவு பெற்ற, ஒரே கட்சியான தவாக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. அதே வட தமிழகத்தில் பட்டியலின மக்களின் ஆதரவை பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனும் தற்போது வரை தொகுதிகள் எண்ணிக்கையும், உடன்பாடும் எட்டப்படவில்லை.

வட தமிழகத்தில் வன்னியர்+பட்டியலின சமூக மக்களின் குறிப்பிட்ட சதவீதம் ஓட்டுகளை கொண்ட இவ்விரு கட்சிகளின் ஆதரவு திமுகவுக்கு நிச்சயம் தேர்தலில் கை கொடுக்கும். ஏற்கனவே திமுக கூட்டணிக்கு தவாக டாட்டா காட்டிவிட்டதால், பட்டியலின மக்களின் ஆதரவு பெற்ற, விடுதலை சிறுத்தைகளின் ஆதரவு, திமுகவுக்கு அவசியமான ஒன்று.

எனவே, மார்க்சிஸ்ட் மற்றும் விசிக நாளை நடத்துவதாக இருக்கும் ஆலோசனை கூட்டங்கள், திமுக கூட்டணியை திக்…திக்…மனநிலையில் காத்திருக்கச் செய்திருக்கின்றன என்கின்றனர், அரசியல் கட்சியினர்.

Source link