ஆமதாபாத்: குஜராத்தில், உயர் வகுப்பைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 25ம் ஆண்டு திருமண விருந்தில், சட்டவிரோதமாக

ஆமதாபாத்: குஜராத்தில், உயர் வகுப்பைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 25ம் ஆண்டு திருமண விருந்தில், சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபானங்கள், ‘ஹூக்கா’ பயன்படுத்திய குற்றத்திற்காக, அம்மாநிலத்தின் பிரபல டாக்டர்கள், தொழிலதிபர்கள் என, 38 பெண்கள் உட்பட 81 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மதுவிலக்கு தடைச் சட்டம் அமலில் உள்ளது.

சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது, மது அருந்துவது போன்ற குற்றங்களுக்கு, அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது.

மதுவிலக்கு தடைச் சட்டம் கடுமையாக்கப்பட்டு இருந்தாலும், குஜராத்தின் ஆமதாபாதில் சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபானங்கள், போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆமதாபாதின் சனந்த் பகுதியில் உள்ள, ‘நிர்வாணா கிரீன்ஸ்’ என்ற விடுதிக்கு போலீசார் சென்றனர். அங்கு உயர் வகுப்பைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 25ம் ஆண்டு திருமண விருந்து கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில், சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபானங்கள், ஹூக்கா உள்ளிட்டவை பரிமாறப்படுவதை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றோரின் 20க்கும் மேற்பட்ட சொகுசு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த விருந்தில் பங்கேற்க, குஜராத் மாநிலத்தின் பிரபல டாக்டர்கள், தொழிலதிபர்கள் என, 38 பெண்கள் உட்பட 81 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான நபர்களில் ஆண்களை மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போலீசார், பெண்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பெரும் பணக்காரர்களின் வாரிசுகள் மற்றும் செல்வாக்குமிக்க பிரமுகர்கள் கைதானதால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதில் தொடர்புடையோர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Source link