ஹவானா: கியூபாவில் மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் 2வது முறையாக ஏற்பட்டுள்ள இந்த மின்வெட்டால் 10 லட்சம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
கியூபாவில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் மின்வெட்டு நிலவுகிறது. எரிபொருள் வினியோகம் தட்டுப்பாட்டு மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் முடக்கம் காரணமாக அங்கு மின்வெட்டு தொடர்ந்து நீடித்து வருகிறது.
பல்வேறு நகரங்களில் தினமும் குறைந்தது 4 மணிநேரம் மின்வெட்டு இருக்கிறது. அண்மையில் மோரோன் நகரில் நிலவிய மின்வெட்டை கண்டித்து மாணவர்கள் நடத்திய பேரணி பெரும் வன்முறையில் முடிந்தது.
இந் நிலையில், கியூபாவில் மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டு எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது. நாட்டின் தேசிய மின்வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டு, மின்வினியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது, அதை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன என்று அமைச்சகம் எக்ஸ் வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளது.
வெனிசுலாவில் இருந்து எரிபொருள் வினியோகத்தை அமெரிக்கா தடுக்கத் தொடங்கியதில் இருந்தே கியூபா மின்வெட்டால் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கியூபாவில், உணவு மட்டுமல்லாது மருந்துகளுக்கும் பற்றாக்குறையே நிலவுகிறது.
