தணிக்கை சான்று கிடைக்காமல், இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் த.வெ.க., தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. தன்னுடைய கடைசி படம் என்று சொல்லி ஜனநாயகன் படத்தில் நடித்தார், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். படம் கடந்த செப்டம்பரிலேயே முடிந்து விட்டது. படத்தை இந்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக் குழுவினர் முடிவெடுத்தனர்.
தேவையில்லை
முன்கூட்டியே படத்தை தணிக்கை சான்றுக்கு அனுப்பி வைத்தனர். மத்திய தணிக்கை குழுவினர் இந்த படத்தைப் பார்த்து, யு/ஏ சான்றிதழ் வழங்குவதாக அறிவித்தனர்.
ஆனால், சான்றுக்காக படத்தை தணிக்கை செய்த குழுவினரில் ஒருவர், ‘படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் நிறைய உள்ளன. அதனால், படத்துக்கு தணிக்கை சான்று வழங்க தேவையில்லை’ என, தணிக்கை வாரிய தலைவரிடம் புகார் அளித்தார்.
அதை தொடர்ந்து, படத்தை மறு தணிக்கை செய்ய தணிக்கை வாரியம் முடிவெடுத்தது. இதனால், அறிவிக்கப்பட்ட தேதியான ஜன., 9ல் படம் வெளியாகாமல் போனது. இதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் படக்குழு முறையிட்டது. ஆனால், அங்கு படக் குழுவினருக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை.
இதனால், படம் வெளியாவது தள்ளிக் கொண்டே போனதோடு, எப்போது படம் வெளியாகும் என்று தெரியாத நிலை ஏற்பட்டது.
‘பிரச்னை, அரசியல் பின்புலம் கொண்டது; அதனால், பா.ஜ.,வின் அதி முக்கியஸ்தராக இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பாருங்கள்; பிரச்னை முடிவுக்கு வரும்’ என விஜய் தரப்புக்கு, சிலர் ஆலோசனை கூறினர்.
அதையடுத்து, நடிகர் விஜய்க்கு ஆலோசகராகவும், நெருக்கமானவராகவும் இருக்கும் விஷ்ணு ரெட்டி, தனக்கு டில்லியில் அறிந்த முகமாக இருக்கும், இந்தியாவின் இரண்டாம் தலைமகனாக இருக்கும் முன்னாள் பா.ஜ., முக்கியஸ்தரை அணுகினார்; அவர், அமித் ஷாவை சந்திக்க நேரம் வாங்கிக் கொடுத்தார்.
தள்ளிவைக்க தயார்
அதன் தொடர்ச்சியாக, சில நாட்களுக்கு முன் விஜய் சார்பில் டில்லி சென்ற விஷ்ணு ரெட்டி, அமித் ஷாவை சந்தித்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது, ‘ ஜனநாயகன் படத்தை வெளியிட நீங்கள் உதவ வேண்டும்; தேவையானால், நீங்கள் விரும்பாத காங்கிரசை தள்ளி வைக்க, த.வெ.க., தயாராக இருக்கிறது’ என, அமித் ஷாவின் எண்ணத்துக்கு ஏற்ப, விஜய் தரப்பில் உறுதியளிப்பது போல, நிறைய விஷயங்களை விஷ்ணு ரெட்டி பேசியிருக்கிறார்.
இதை ஏற்றுக் கொண்ட அமித் ஷா, ‘சில நாட்களுக்கு உங்கள் நடவடிக்கை கண்காணிக்கப்படும்; அதன் பின், நல்ல முடிவு எடுக்கப்படும்’ என விஷ்ணு ரெட்டியிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார்.
பச்சைக்கொடி
இதையடுத்து, விரைவில் டில்லியில் இருந்து ஜனநாயகன் படத்துக்கு பச்சைக்கொடி காட்டப்படும் என, த.வெ.க., தரப்பில் ஆவலாக உள்ளனர்.அப்படி பச்சைக்கொடி காட்டப்பட்டால், ஜன நாயகன் படம் விரைவில் வெளியாகும் என்கிறது த.வெ.க., வட்டாரம்.
த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது:
தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர், வரும் சட்டசபை தேர்தலுக்கு, த.வெ.க.,வுடன் கூட்டணி சேர விரும்புகின்றனர். அதற்காகவே, காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுலின் நண்பரும், காங்., தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தி, சமீபத்தில் நடிகர் விஜயை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இதையடுத்து, காங்கிரஸ் – த.வெ.க., இடையே கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டதோடு, காங்., கட்சியில் பெரும்பாலானோர் அதை வலியுறுத்தி, கட்சித் தலைமைக்கு கோரிக்கையும் விடுத்தனர். ஆனால், சோனியா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்., தலைவர்கள், தி.மு.க.,வோடு தான் கூட்டணி தொடர வேண்டும் என விரும்பியதால், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களின் விருப்பம் நிறைவேறாமல், இழுபறியானது.
காங்கிரசோடு கூட்டணி சேருவதில் த.வெ.க.,வும் விருப்பம் காட்டியது, பா.ஜ., தலைமைக்குப் பிடிக்கவில்லை. இதையடுத்தே, ஜனநாயகன் படம் வாயிலாக, விஜய்க்கு கடிவாளம் போடப்பட்டது.
யதார்த்தத்தை புரிந்து கொண்ட விஜய் தரப்பு, காங்கிரசை தள்ளி வைத்து, ஜனநாயகன் படத்துக்கான சிக்கலை தீர்த்துக்கொள்ள விரும்பியது. அதையடுத்தே, விஜயின் நண்பரும், ஆலோசகருமான விஷ்ணு ரெட்டி – அமித் ஷா சந்திப்பு நடந்திருக்கிறது. அப்போது நடந்த பேச்சு அடிப்படையில், ஜனநாயகனுக்கு இருக்கும் தடை விரைவில் நீங்கும் என தெரிகிறது.
கூட்டணிக்கு வருவதாக போக்கு காட்டி வரும் காங்கிரசும் சரியான முடிவெடுக்காமல், தி.மு.க.,வோடும் பேசிக் கொண்டு, த.வெ.க.,வோடும் பேசுவதை விஜய் ரசிக்கவில்லை. இந்த காரணத்திற்காகவும், காங்கிரசை தள்ளி வைக்க விஜய் முடிவெடுத்துள்ளார். விரைவில் ஜனநாயகன் வெளியாவது மட்டுமல்ல; தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்த திருப்பங்களும் காத்திருக்கின்றன. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
@Image@
தேர்தல் அறிக்கைக்கு கருத்து கேட்கும் விஜய்
‘தேர்தல் அறிக்கை தயார் செய்ய, பொதுமக்கள் தங்களின் கருத்தை த.வெ.க., இணையதளத்தில் தெரிவிக்கலாம்’ என, அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘த.வெ.க., தேர்தல் அறிக்கை, ஆட்சி மாற்றத்தை நோக்கி இருக்கும். அதற்காக தயாராகும் எங்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து, https://tvkmanifesto2026.com என்ற இணையதளத்தில், பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம்’ என கூறப்பட்டுள்ளது.
– நமது நிருபர் –
