சென்னை:’சொத்து வாங்கியதில் மதிப்பை குறைத்து காட்டியதால், அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய, 97.73 லட்சம் ரூபாய் முத்திரை தீர்வையை செலுத்த வேண்டும்’ என, முன்னாள் எம்.எல்.ஏ., கீதா மணிவண்ணனுக்கு பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில், 2016 – 21ம் ஆண்டு, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் கீதா. தற்போது, தி.மு.க.,வில் உள்ளார். இவரும், இவரது கணவர் மணிவண்ணனும் சேர்ந்து, கரூர் மாவட்டம் பாலாம்பாள்புரம் பகுதியில், 2024ல் ஒரு சொத்து வாங்கினர். அந்த சொத்து ஒரு குறிப்பிட்ட பொது அறக்கட்டளைக்காக வாங்கப்பட்டது என்றும், அதிலிருந்த பள்ளி கட்டடம் மறைக்கப்பட்டு, பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில், பத்திரப்பதிவின் போது, நிலத்துக்கான வழிகாட்டி மதிப்புடன், கட்டடத்தின் மதிப்பு சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அங்கு பள்ளி கட்டடம் இருந்தது மறைக்கப்பட்டு, பத்திரப்பதிவு செய்தது விசாரணையில் உறுதியானது.
இதுதொடர்பாக, கரூர் மாவட்ட இணை சார் பதிவாளர் பிறப்பித்த உத்தரவு:
முன்னாள் எம்.எல்.ஏ., கீதா, அவரது கணவர் மணிவண்ணன் பெயரில் பதிவான, இரண்டு கிரைய பத்திரங்களை ஆய்வு செய்ததில், அதில் கட்டடத்துக்கான மதிப்பு மறைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வகையில், 97.73 லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, இத்தொகையை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறினால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
