போலவரம் : ஆந்திராவின் ஜனசேனா கட்சியைச் சேர்ந்த எம்.எல்-.ஏ., பாலராஜு, சைபர் கிரைம் மோசடியில் சிக்கி 12 லட்சத்தை இழந்தார்.
ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள போலவரம் தொகுதி எம்.எல்.ஏ-.,வாக பாலராஜு உள்ளார்.இவரது மொபைல் போனுக்கு, கடந்த 6ம் தேதி சாலைப் போக்குவரத்துத் துறையிடம் இருந்து, ‘செலான்’ என்ற பெயரில் ஒரு கோப்பு வந்தது. அதை பாலராஜு திறந்து பார்த்த சில நிமிடங்களிலேயே, அவரின் வங்கி கணக்கில் இருந்த 12 லட்சம் ரூபாயும் மர்ம நபர்களால் பறிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாலராஜு, இது குறித்து தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணில் புகார் அளித்தார். இந்த மனு உள்ளூர் போலீசாருக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அவர்கள் அது குறித்து விசாரணை நடத்தினர்.எம்.எல்.ஏ.,வின் வங்கி கணக்கு மற்றும் மொபைல் போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், மேற்கு வங்கத்தில் உள்ள ஏ.டி.எம்., ஒன்றின் வாயிலாக அவரின் பணம் எடுக்கப்பட்டது உறுதியானது. இணையவழி மோசடியில் தொடர்புடைய சர்வதேச கும்பலுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என சந்தேகித்துள்ள போலீசார் அது குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
