வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னர் அறிவித்த வரிச்சலுகை காரணமாக பிடித்தம் செய்யப்பட்ட பணம் அதிகளவு திரும்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெட்ரோல் விலை உயர்வு அதை குறைத்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து பிப்ரவரி 28ல் போரை துவக்கியது. போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு மாதத்தில் 34 சதவீதத்தில் மேல் உயர்ந்துள்ளது. கேலன் எனப்படும் 3.78 லிட்டர் அளவிலான பெட்ரோலின் விலை அமெரிக்காவில் 3.94 டாலராக உயர்ந்துள்ளது.
இதேநிலை மேலும் சில காலம் நீடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் விளைவாக, மக்களுக்கு கிடைக்கும் வரிச்சலுகை தொகை பெரும்பாலும் எரிபொருள் செலவுக்கே பயன்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஒரு சராசரி குடும்பம் இந்த ஆண்டில் பெட்ரோலுக்காக கூடுதலாக 70,000 ரூபாய் வரை செலவிட வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, அவர்களுக்கு வரிச்சலுகை திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகையுடன் சமமாக இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், ‘பெட்ரோல் விலை உயர்வால் குறைந்த மற்றும் நடுத்தர வருமான குடும்பங்கள் அதிக பாதிப்பை சந்திக்கின்றன. அவர்கள் வருமானத்தில் பெரும் பகுதியை எரிபொருளுக்கே செலவிட வேண்டியிருக்கும்.
‘உணவு, உடை, பொழுதுபோக்கு போன்ற பிற செலவுகள் குறையும். இதனால், மொத்த நுகர்வு குறைந்து, அமெரிக்க பொருளாதார வளர்ச்சி மந்தமாகும்’ என்றனர்.
