ரிஷாப் பன்ட் புதிய அவதாரம்: பிரிமியர் தொடரில் திட்டம்

லக்னோ: பிரிமியர் தொடரில் மூன்றாவது இடத்தில் களமிறங்க திட்டமிட்டுள்ளார் கேப்டன் ரிஷாப் பன்ட்.

இந்திய அணியின் விக்கெட்கீப்பர்-பேட்டர் ரிஷாப் பன்ட், 28. விபத்து, வலது காலில் காயம் போன்ற சோதனைகளில் இருந்து மீண்டுள்ளார். தற்போது டெஸ்ட் அணியில் மட்டும் வாய்ப்பு பெறுகிறார். ஒருநாள் போட்டியில், ராகுலுக்கு மாற்று கீப்பராக இடம் பெறுகிறார். ‘டி-20’ போட்டியில் புறக்கணிக்கப்படுகிறார்.

சாம்சன், இஷான் சவால்: சமீபத்தில் இந்திய அணி ‘டி-20’ உலக கோப்பை வெல்ல, கீப்பர்-பேட்டர்களான சாம்சன், இஷான் கிஷான் முக்கிய காரணம். இதனால் ரிஷாப் பன்ட்டிற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. வரும் 28ல் துவங்கும் 19வது பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடரில் லக்னோ அணிக்காக சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 2025ல் நடந்த ‘மெகா’ ஏலத்தில் இவரை ரூ. 27 கோடிக்கு லக்னோ வாங்கியது. இருப்பினும் கடந்த முறை 14 போட்டியில் 269 ரன் தான் எடுத்தார். புள்ளிப்பட்டியலில் லக்னோ 7வது இடம் பிடித்து ஏமாற்றியது.

இம்முறை ரிஷாப் அதிரடியாக ஆடினால், இந்திய ‘டி-20’ அணியில் மீண்டும் இடம் பிடிக்க முயற்சிக்கலாம். கடந்த சீசனில் ஆரம்பத்தில் 4வது இடத்தில் களமிறங்கினார். கடைசி கட்டத்தில் 3வது இடத்தில் வந்தார். தற்போது மூன்றாவது இடத்தில் தொடர உள்ளார். இதனால் நிக்கோலஸ் பூரன் 4, 5 அல்லது 6வது இடத்தில் களமிறக்கப்படுவார்.

மயங்க் நம்பிக்கை: லக்னோ அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,”எங்களது ‘பேட்டிங்’ வலுவாக உள்ளது. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் முடிவின்படி, ‘டாப்-3’ இடத்தில் மார்க்ரம், மிட்சல் மார்ஷ், கேப்டன் ரிஷாப் பன்ட் களமிறங்குவர். ‘மிடில் ஆர்டர்’ பூரன், படோனி, அப்துல், ஷாபாஸ் போன்றோர் சூழலுக்கு ஏற்ப மாற்றப்படுவர். கடந்த முறை ‘வேகப்புயல்’ மயங்க் யாதவ், மொசின் கான் காயத்தால் அவதிப்பட்டது பலவீனம். இம்முறை பவுலிங்கில் முன்னேற்றம் காணப்படுகிறது. மயங்க் யாதவ் முழு உடற்தகுதியுடன் உள்ளார். இவர், வலைபயிற்சியில் அதிக நேரம் செலவிட வேண்டும். இவர் மீது அணி நிர்வாகம் வைத்துள்ள நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும்,”என்றார்.

தென் ஆப்ரிக்க முன்னாள் கேப்டன் டுபிளசி கூறுகையில்,”இந்த சீசனில் அதிக மன அழுத்தத்தை சந்திக்கும் வீரராக ரிஷாப் பன்ட் உள்ளார். பெரிய தொகைக்கு வாங்கப்படும் சிலர் பிரகாசிப்பர். சிலர் சோபிக்க தவறிவிடுவர். கடந்த சீசனில் ‘காஸ்ட்லி’ வீரரான ரிஷாப், ரன் குவிக்க முடியாமல் தடுமாறினார். இந்த சீசனில் இவர் மீது கூடுதல் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லக்னோ அணியின் பவுலிங் பலவீனமாக உள்ளது. இதை எப்படி சமாளிக்க போகின்றனர் என தெரியவில்லை. கேப்டன் ரிஷாப் சிறப்பான ஸ்கோர் எடுத்தால், அணி மீதான நெருக்கடி குறையும்,”என்றார்.

வருகிறார் ஷனகா

ராஜஸ்தான் அணியில், காயம் அடைந்த சாம் கர்ரானுக்கு பதிலாக இலங்கை கேப்டன் தசுன் ஷனகா இடம் பெறுகிறார். இவர், பாக்., சூப்பர் லீக் தொடரில் இருந்து விலகினார். சமீபத்திய ‘டி-20’ உலக கோப்பை தொடரில் ஷனகா, 165 ரன், 3 விக்கெட் (7 போட்டி) வீழ்த்தினார்.

சரியான பாதையில் பஞ்சாப்

இந்திய அணியின் முன்னாள் ‘ஆல்-ரவுண்டர்’ இர்பான் பதான் கூறுகையில்,”பஞ்சாப் அணியில் ஓமர்சாய், யான்சென், ஸ்டாய்னிஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் இருப்பது பெரும் பலம். தரமான வீரர்களுடன் தெளிவான பாதையில் செல்கிறது,”என்றார்.

Source link