புதுடில்லி: மேற்காசியாவில் நடக்கும் போரால் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவுக்கு செல்ல வேண்டிய ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பலான, ‘அக்வா டைட்டன்’ நடுவழியில் திடீரென தன் பாதையை மாற்றி, கர்நாடகாவின் நியூ மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தது. விரைவில், ரஷ்யாவைச் சேர்ந்த ஆறு கச்சா எண்ணெய் கப்பல்கள் நம் நாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து, பிப்., 28 முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, 86, கொல்லப்பட்டார்.
இதற்கு ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.
அமெரிக்காவின் தாக்குதலால் கடுப்பான ஈரான், உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கி உள்ளது.
இதனால், நம் நாடு உட்பட உலகம் முழுதும் எரிவாயு, கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஈரான் அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்தியதை அடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியில் நம் தேசியக் கொடி ஏந்திய கப்பல்கள் செல்ல அந்நாடு அனுமதி அளித்துள்ளது. இந்த பகுதியை கடந்து, சமையல் எரிவாயு ஏற்றி வந்த ‘நந்தா தேவி, சிவாலிக்’ ஆகிய கப்பல்கள் நம் நாட்டுக்கு சமீபத்தில் வந்தன.
இந்நிலையில், நம் அண்டை நாடான சீனாவின் ரிஷாவ் துறைமுகத்துக்கு செல்ல வேண்டிய ரஷ்ய கச்சா எண்ணெயை நம் நாட்டுக்கு தருவதாக ரஷ்யா அறிவித்தது.
அதன்படி, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றி வந்த ‘அக்வா டைட்டன்’ என்ற சரக்கு கப்பல், தென் சீனக் கடல் பகுதியில், நடுவழியில் திடீரென தன் பாதையை மாற்றி, கர்நாடகாவின் நியூ மங்களூரு துறைமுகத்துக்கு நேற்று வந்தது.
மைல்கல் அதேபோல், அமெரிக்கா வின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து, 16,714 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த, ‘பிக்சிஸ் பயனீர்’ கப்பலும் நியூ மங்களூரு துறைமுகத்துக்கு வந்தது. இது, நம் நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களில் மட்டும், சீனாவுக்கு செல்ல வேண்டிய ஏழு ரஷ்ய கப்பல்கள் நம் நாட்டுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
இவற்றில் ஒரு கப்பல் வந்து சேர்ந்துள்ளது; மற்றவை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், நம் எண்ணெய் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதே, இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ரஷ்ய எண்ணெயை வாங்க உலக நாடுகளுக்கு அமெரிக்கா தற்காலிக அனுமதி வழங்கி உள்ள நிலையில், நம் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு வாரத்தில் மட்டும் 3 கோடி பேரல் ரஷ்ய கச்சா எண்ணெயை முன்பதிவு செய்துள்ளது.
உறுதி இதற்கிடையே, மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானின் கச்சா எண்ணெயை ஏற்றி வரும் ‘சூசு என்’ என்ற சரக்கு கப்பல், விரைவில் குஜராத்தின் சிக்கா துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிசக்தி வினியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றங்கள், மேற்காசிய நாடுகளை சார்ந்திருப்பதை குறைத்து, நம் நாடு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதை காட்டுகின்றன.
