துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட, பிளஸ் 2 மாணவி குடும்பத்தினரை, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, ‘உங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்போம். கொல்லப்பட்ட மாணவியின் சகோதரிக்கான கல்வி செலவு, வேலைக்கான அனைத்து உதவியும் செய்வோம். தைரியமாக இருங்கள்’ என, கனிமொழி உறுதி அளித்தார்.
பின் கனிமொழி அளித்த பேட்டி:
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு நிம்மதியையும் அமைதியையும் அளிக்கும் வகையில், போலீசார் விரைந்து செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர்.
கொல்லப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்கும் வகையில், நிச்சயமாக உச்சபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும். பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்கும் வகையில் சட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
