ஜோத்பூர்: ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் வசிக்கும் பிஷ்னோய் சமூகத்தினர், தங்கள் குடும்பத்தில் மரணம் நிகழ்ந்த பின் மவுசர் எனப்படும் சடங்கை நடத்துகின்றனர். இதில், தங்கள் உறவுகளில் தொடர்புடைய பல குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதை அவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவருக்கு, கடந்த 2016ல் இந்த முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.
பெற்றோர் மற்றும் சமூக கட்டமைப்பு காரணமாக வலுக்கட்டாயமாக நடத்தப்பட்ட திருமணம், ‘குழந்தை திருமண தடை சட்டம் – 2006’ன்படி செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு பின், கணவருடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி சிறுமிக்கு பெற்றோர் தரப்பிலும், புகுந்த வீட்டில் இருந்தும் அழுத்தம் தரப்பட்டது.
இளம் பெண் பருவ வயதை அடைந்த நிலையில், விருப்பமில்லாத வாழ்க்கைக்கு வலுக்கட்டா யமாக தள்ளப்பட்டதை உணர்ந்து, அதிலிருந்து விடுபட விரும்பினார்.
இதற்காக, ஜோத்பூரில் செயல்படும் சாரதி சமூக அறக்கட்டளையை அவர் அணுக, அவர்கள் உதவியுடன் திருமண பந்தத்தில் இருந்து விடுதலை பெறக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் பெற்றோர், புகுந்த வீட்டினர் உட்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. திருமணம் நடந்தபோது சிறுமியின் வயது தொடர்பான ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘குழந்தை திருமணம் என்பது குழந்தைகளின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சீர்குலைக்கிறது. அதை ஒழிப்பதற்கு சமூகத்தின் கூட்டு முயற்சி அவசியம்.
‘இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு அவரின் திருமணம் செல்லாது என நீதிமன்றம் அறிவிக்கிறது’ என கூறப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பால் நிம்மதியடைந்த அந்த இளம் பெண், ஏழாம் வகுப்புடன் பாதியிலேயே நிறுத்திய தன் பள்ளிப் படிப்பை மீண்டும் திறந்தவெளி பள்ளி வாயிலாக தொடர தயாராகி வருகிறார்.
