வாஷிங்டன்: அமெரிக்க சுதந்திர தினத்தின் 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1776, ஜூலை 4ல் அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது. அதன் 250வது ஆண்டு விழாவை இந்தாண்டு பிரமாண்டமாக கொண்டாட வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளது. வரும் ஜூலை 4ல் கொண்டாடப்பட உள்ள விழாவை ஒருங்கிணைக்க, விழாக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 250 ஆண்டுகளில் அமெரிக்கா அடைந்த முன்னேற்றம், ஜனநாயக மதிப்புகள், எதிர்காலத்துக்கான இலக்குகள் போன்றவற்றை முன்னிலைப்படுத்துவதே இந்த விழாவின் நோக்கமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
சுதந்திரம் அடைந்த 250வது ஆண்டை குறிக்கும் வகையில், சிறப்பு நாணயங்கள் மற்றும் தபால் தலைகளை வெளியிட அமெரிக்க நுண்கலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் இறுதி அளவுகள் முடிவு செய்யப்பட்டவுடன், இந்த நாணயம் அச்சிடப்படும் என கூறப்படுகிறது. 24 காரட் தங்கத்தில் உருவாக்கப்படும் சிறப்பு நாணயத்தில், அந்நாட்டு அதிபர் டிரம்ப் தன் கைகளை இறுக மூடியபடி, மேஜை முன் சாய்ந்தவாறு இருப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட உள்ளது. இது குறித்து அமெரிக்க நிதியமைச்சக அதிகாரி பிராண்டன் பீச் கூறியதாவது:
நம் நாட்டின் 250வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை நாம் நெருங்கி வருகிறோம். இதையொட்டி, நம் நாட்டின் ஜனநாயகத்தின் நீடித்த உணர்வை பிரதிபலிக்கும் வகையில், நாணயங்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நாணயங்களில், ஒரு பக்கத்தில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் உருவம் இடம்பெற உள்ளது. ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அவரின் முகம் அதில் இடம்பெற உள்ளதை விட சிறந்த அடையாளம் வேறெதுவும் இல்லை.
அமெரிக்க சட்டத்தின் படி, பதவியில் இருக்கும் எந்தவொரு அதிபரின் உருவமும் அமெரிக்க பணம் மற்றும் சிறப்பு நாணயத்தில் இடம் பெறக்கூடாது.
இருப்பினும், இந்த நினைவு நாணயம், புழக்கத்தில் இருக்கும் பணத்தில் இருந்து வேறுபட்டது. இருப்பினும், இறுதி வடிவமைப்பு மற்றும் அச்சிடுவதற்கான அனுமதி வழங்குவதற்கு கருவூல செயலருக்கே முழு அதிகாரம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, 250வது சுதந்திர ஆண்டு விழாவையொட்டி வெளியிடப்படும் நாணயத்தில் டிரம்ப் இடம் பெறுவது குறித்து ஜனநாயக கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
