ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் டாடா – ஜாகுவார் ஆலை தயார்

புதுடில்லி: தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும், ‘டாடா மோட்டார்ஸ் -  ஜாகுவார் லேண்ட் ரோவர்’ கார் உற்பத்தி ஆலையை, முதல்வர் ஸ்டாலின் வரும் 9ம் தேதி துவக்கி வைக்கிறார். இந்த ஆலை பனப்பாக்கம், ‘சிப்காட்’ வளாகத்தில் அமைந்துள்ளது.

‘டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெகிக்கிள்ஸ்’ நிறுவனத்தின் துணை நிறுவனம் ஜே.எல்.ஆர்., என அழைக்கப்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர்.

இந்நிறுவனத்தின் கார் தயாரிப்பு ஆலை கிட்டத்தட்ட 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 470 ஏக்கர் பரப்பளவில் பனப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, அடுத்த வாரம் முதல் இங்கு, ஜே.எல்.ஆர்., நிறுவனத்தின், ‘ரேஞ்ச் ரோவர் இவோக்’ சொகுசு கார் ‘அசெம்பிளிங்’ செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் உதிரிபாகங்கள் உட்பட முழுமையான உற்பத்தி இந்த ஆலையில் நடைபெறும். ஆண்டுக்கு, 2.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தொழிற்சாலையால், கிட்டத்தட்ட 5,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, எதிர்காலத்தில் இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் கார்களை ஏற்றுமதி செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இதுவரை புனேவில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஜாகுவார் கார்களின் உற்பத்தி பணி, இனி படிப்படியாக இந்த புதிய ஆலைக்கு மாற்றப்படும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் சொகுசு கார்களுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், ‘மெர்சிடிஸ் பென்ஸ்’ மற்றும் பி.எம்.டபிள்யூ., நிறுவனங்களுக்கு போட்டியாக, டாடா மோட்டார்ஸ் தன் உற்பத்தி திறனை விரிவுபடுத்தி வருகிறது.

Source link