ஸ்ரீபெரும்புதுார்: சாம்சங் தொழிற்சாலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட, 27 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி, சென்னை தலைமை செயலகம் நோக்கி நேற்று, குடும்பத்துடன் நடைபயணம் மேற்கொள்ள முயன்ற 200 ஊழியர்களை, போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களில் ஒரு பகுதியினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2024 செப்., 9 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நீட்டித்ததால், தமிழக அரசு தலையிட்டது. பொதுப்பணி துறை அமைச்சர் வேலு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது. போராட்டத்தை வாபஸ் பெற்று, ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
இந்நிலையில், தொழிற்சங்கத்தில் இருந்து விலகி, தொழிற்சாலை நிர்வாகத்திற்கு ஆதரவான கமிட்டியில் சேர, நிர்வாகம் அழுத்தம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, ஜன., 31ல் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து, தொழிற்சாலை நிர்வாக இயக்குநரை சந்திக்க அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்டது.
தொழிற்சாலைக்குள் பதற்றமான சூழலை உருவாக்கியதாக கூறி, பிப்., 4ல், 27 ஊழியர்களை சாம்சங் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி, சி.ஐ.டி.யு., சார்பில், பல கட்ட பேச்சு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
‘சஸ்பெண்ட் செய்யப்பட்ட 27 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவர்’ என, சட்டசபையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார். ஆனால், இதுவரை பணியில் சேர்க்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள், தி.மு.க., அரசை கண்டித்து, சுங்குவார்சத்திரத்தில் இருந்து சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர், தங்கள் குடும்பத்துடன், தலைமை செயலகம் நோக்கி, நேற்று நடைபயணம் செல்ல முயன்றனர்.
சுங்குவார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் 200 பேரை கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்தனர்.
