நிகழ்வு 1
இந்தியாவையே உலுக்கிய ஒரு மிகப்பெரிய சம்பவம். அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பலர் இதில் சம்பந்தப்பட்டிருந்தனர். முக்கிய குற்றவாளிகள் சிறையில் இருந்தனர். இதில் ஒரு பிரபல நடிகரும் சம்பந்தப்பட்டிருந்தார். கைதாகி சில மாதங்கள் சிறையில் இருந்த பின் அவருக்கு ஜாமின் கிடைத்தது.
இவருக்காக தொடக்கத்தில் வாதாடிய ஒரு மிகப் பெரிய கிரிமினல் வக்கீல். ஒரு அரசியல் வாதியும் கூட. அந்த வக்கீல் தன் வாதத்தின் போது செய்த ஒரு தவறால் நடிகர் சிறை செல்ல நேர்ந்தது என உச்ச நீதிமன்ற வக்கீல்கள் மத்தியில் அப்போது பேசப்பட்டது. ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தால் அந்த நடிகரின் வாழ்க்கை என்னாகும்’ என பல டிவிக்கள் வாரம் ஒரு முறை விவாதம் நடத்திக்கொண்டிருந்தன.
ஏகப்பட்ட ஆவணங்கள்
இந்த வழக்கு கீழமை கோர்ட்டில் 12 ஆண்டுகள் நடந்தது. 7000 பக்கங்களுக்கு மேல் ஆவணங்கள். 686 சாட்சிகளின் அறிக்கைகள், 684 அரசு தரப்பு சாட்சிகள். இது போதாதென்று 13000 பக்கங்களுக்கு மேலான வாய்மொழி அறிக்கைகள் என தலையை சுற்றவைக்கும் அளவிற்கு இந்த வழக்கில் ஆவணங்கள். கீழமை கோர்ட்டின் தீர்ப்பே 4000 பக்கங்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்;
இந்த வழக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று. இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்துக்கொண்டிருந்தது. அதில் ஒரு நீதிபதியை எனக்கு நல்ல பழக்கம். அடிக்கடி அவருடன் பேசுவேன். வீட்டிற்கும் சென்றுள்ளேன். என் மீது மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தார். ஒரு விடுமுறை நாளில் அவர் வீட்டிற்கு அழைக்க, நான் சென்றேன்.
எங்களுக்கு விடுமுறையே கிடையாது
“விடுமுறையில் நீங்கள் வெளியூர் செல்வீர்கள் என எதிர்பார்த்தேன்,” என அவரிடம் சொன்னேன். “பத்திரிகைகளிலும் டிவிக்களிலும் நீதிபதிகளுக்கு சம்மர் லீவு, குளிர்காலத்தில் லீவு, தீபாவளிக்கு லீவு என ஏதோ நாங்கள் வேலையே செய்யாமல் விடுமுறையில் ஜாலியாக இருப்பதாக செய்தி போடுகிறீர்கள்…
நாங்கள் செய்யும் வேலையைப் பற்றி உங்களுக்கு தெரிவதில்லை, இதனால் மக்களுக்கும் தெரியவழியில்லை,” என்றார். “ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கூடத்திற்கு விடுவது போல விடுமுறை வருவதால் மீடியாவில் அப்படி எழுதுகிறார்கள்,” என்றேன், நான். “அதுதான் தவறு, நாங்கள் விடுமுறையில் இருந்தாலும் எப்போதும் எங்களுக்கு வேலைதான்.
விடுமுறை நாட்களில் சும்மா இருப்பதில்லை… இருக்கவும் முடியாது. இந்த விடுமுறையை நாங்கள் எப்படி பயன்படுத்துகிறோம் தெரியுமா,” என்று என்னைப் பார்த்தார். நான் பதில் சொல்லவில்லை. “நாங்கள் தர வேண்டிய தீர்ப்புகளை இந்த விடுமுறை நாட்களில்தான் எழுதுகிறோம்.
கோர்ட் வேலை செய்யும் நாட்களில் அன்றைய வழக்குகளை படிப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். எனவே எங்கள் விடுமுறை இப்படி தீர்ப்புகளை எழுதியே கழிந்துவிடுகிறது. ஆனால் உங்களுக்கோ நாங்கள் ஜாலியாக இருக்கிறதாக நினைப்பு” சற்று சலிப்புடனே சொன்னார் அந்த நீதிபதி.
ஜெயில் போவது நிச்சயம்
அவருடைய அறைக்கு போனேன். அங்குதான் அவர் அமர்ந்து தீர்ப்புகளுக்கான ஆவணங்களைப் படிப்பார். பிறகு தீர்ப்பை டிக்டேட் செய்வார். அந்த அறையின் டேபிள்களிலும் தரையிலும் பைல்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. “என்ன சார் இவ்வளவு பைல்கள்” என்று கேட்டேன். “இது அத்தனையும் அந்த வழக்கு சம்பந்தப்பட்டது.
எத்தனை டாகுமெண்ட் இருக்கின்றன தெரியுமா? அனைத்தையும் படித்து தீர்ப்பு எழுதுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா,” என்றார் அவர். உண்மையிலேயே நீதிபதிகளின் வாழ்க்கை மிகவும் கடினமான ஒன்றுதான். இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள அந்த நடிகரைப் பற்றி கேட்டேன். “அவர் வெளியே வந்துவிடுவாரா.”
“என்னது வெளியேவா? அவன் செய்த விஷயத்திற்கு அவன் எப்படி வெளியே இருக்க முடியும்…,” என்றார் அவர். எனக்கு புரிந்துவிட்டது. இந்த நடிகருக்கான தீர்ப்பு தயாராகிவிட்டது என்று. சிறிது நேரம் பேசிவிட்டு அலுவலகத்திற்கு வந்துவிட்டேன்.
என் பாஸின் அறைக்கு சென்றேன்.
“அந்த பிரபல வழக்கில் அந்த நடிகர் ஜெயில் செல்வது உறுதி” என்றேன். செய்தி ஆசிரியருக்கு தூக்கி வாரிப்போட்டது. “ என்னது, அவர் ஜெயிலுக்குப் போவாரா? அவருக்காக வேறொரு மிகப்பெரிய வக்கீல் ஆஜராகி வாதிட்டாரே” என்றார் பாஸ். “அதெல்லாம் சரிதான். நடிகருக்கு எதிரான பல ஆவணங்கள் உள்ளன..எனவே அவர் ஜெயில் போகிறார்” என்றேன் நான்.
‘ஓ அப்படியா’ என வருத்தத்துடன் என்னைப் பார்த்தார் செய்தி ஆசிரியர். “தயவு செய்து இதைப்பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம், தீர்ப்பு வரும் அன்று நாம் தயாராக இருப்போம்” என சொல்லி விடைபெற்றேன். தீர்ப்பும் வந்தது.
ஒருவருக்கு தூக்கு, மற்ற 10 பேருக்கு ஆயுள் தண்டனை. நான் குறிப்பிட்ட நடிகருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை. அலுவலக செய்திப்பிரிவில் ஏற்கெனவே தீர்ப்பு வரும் அன்று காலையே, ‘நடிகருக்கு சிறை’ என்று சொல்லியிருந்தேன். தீர்ப்பு வந்த பிறகு அவர்கள் என்னை பாராட்டி தள்ளிவிட்டனர்.
நிகழ்வு 2
வீரப்பனுக்காக வெளியே காத்திருப்பீர்களா?
சந்தன கடத்தில் வீரப்பன் கொல்லப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும் ஒரு நிகழ்வு என் மனதில் ஆழமாக ஊன்றியுள்ளது. இது வீரப்பனின் புகலிடமான சத்தியமங்கலம் காட்டில் நடந்த நிகழ்வு அல்ல. டில்லி உச்ச நீதிமன்ற விசாரணையின் போது நடந்த விஷயம். இப்படி ஒரு நீதிபதி எஸ்.பி. பரூச்சா தலைமையில் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தது. இது நடந்தது 1990களில்.. சந்தன வீரப்பன் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நான் அப்போது தமிழ் வார இதழுக்காக பணிபுரிந்து கொண்டிருந்தேன். கோர்ட் அறையின் கடைசி பெஞ்சில் அமர்ந்து என் நோட் புக்கில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். ‘வீரப்பனைப் பிடிக்க என்ன முயற்சிகள் எடுத்து வருகிறீர்கள்’ என நீதிபதி பரூச்சா தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேட்டார். அரசு தரப்பில் எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து அனைத்து விவரங்களையும் எடுத்து சொன்னார் வக்கீல். காட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள போலீஸ் செக் போஸ்ட் மற்றும் எப்படி போலீஸ் படை வீரப்பனை தேடி வருகிறது என விவரித்தார் அரசு வக்கீல்.
அதோடு நிற்காமல், ‘வீரப்பன் வெளியே வந்தால் நிச்சயம் போலீசிடம் மாட்டுவான்’ என சொல்லிவிட்டார். “அப்படியானால் உங்களுடைய போலீஸ் காட்டிற்கு வெளியே காத்திருக்கிறது, வீரப்பன் எப்போது வெளியே வருவான், வந்த உடனேயே கைது செய்து விடலாம் என்று… இதுதான் நீங்கள் வீரப்பனை பிடிக்கும் லட்சணமா” என கடுமையாக பேசிவிட்டார் நீதிபதி பரூச்சா.
வக்கீல் தன் பங்கிற்கு எவ்வளவோ சொல்ல முயற்சித்தும் நீதிபதி விடவில்லை. தமிழக அரசை போட்டு தள்ளிவிட்டார். அப்போது இது பெரிய செய்தியாக வெளியாயிற்று. நீதிபதி பரூச்சா சொன்னது, இன்று வரை என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.
நிகழ்வு 3
நாகேஷுடன்……
தமிழ் வார இதழுக்காக டில்லியில் பணியாற்றிய போது பல இனிமையான அனுபவங்கள். திரையிலும் புத்தகங்களிலும் மட்டுமே பார்த்திருந்த பிரபலங்களை நேரில் பார்த்து பழக முடிந்தது. அதில் பலரோடு இன்று வரை நட்பு தொடர்கிறது. பல வருடங்களுக்கு முன் – டில்லியின் நட்சத்திர அசோக் ஹோட்டல். தேசிய திரைப்பட விருது வாங்க வந்திருப்பவர்கள்,
அவர்களைச் சந்திக்க காத்திருக்கும் ரசிகர்கள் என பரபரப்பாக இருந்தது ஹோட்டல் லாபி. டில்லி தமிழ்ச்சங்க அங்கத்தினர்கள் விருது வாங்கும் தமிழர்களைச் சந்திக்க காத்திருந்தனர். பள்ளிக் கூட பையன் போல ஏ.ஆர்.ரஹ்மான். கூடவே அவரது தாயார். ரோஜா படத்தின் இசைக்காக ரஹ்மானுக்கு விருது. பாரதிராஜா, நாகேஷ், பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன். உடன் அவரது மனைவி.
அசோக் ஹோட்டல் நட்சத்திர ஹோட்டல் என்றாலும் நம்ம ஊர் சாப்பாடு போல சுவையாக கிடைக்காது. தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் டில்லியில் தங்கும் தமிழ்நாடு இல்லம் ஹோட்டலுக்கு அருகேதான் இருந்தது. (இப்போது இன்னொரு தமிழ்நாடு இல்லமும் உருவாகிவிட்டது) அங்கு கேட்டரிங் மேனஜராக இருப்பவர் தெய்வசிகாமணி… அனைவருக்கும் உதவுபவர்) 6ம் வகுப்பு மாணவன் உயரத்தில் ஒரு ராட்சத டிபன் கேரியர் அசோக் ஹோட்டலுக்கு காலை 8.30க்கு அனுப்பி விடுவார் தெய்வசிகாமணி. பாரதிராஜா, நாகேஷ் என அனைவருக்கும் சூடான இட்லி, பொங்கல் பரிமாறப்பட்டது.
சாப்பிட்ட பிறகு அனைவரும் லிப்டில் ஏறி மாடிக்கு சென்றோம். உன்னி கிருஷ்ணன் மனைவியோடு லிப்டிற்குள் நுழைந்தார். ‘மாடி வரும் வரை உனக்கு தேசிய விருது வாங்கித் தந்த பாட்டை பாடலாமே’ என்றார் பாரதிராஜா. சற்று தயங்கிய உன்னி…, மனைவியின் முகத்தைப் பார்த்தார். ‘பர்மிஷன் வாங்கணுமோ’ – பாரதிராஜா.
இல்லை என வெட்கத்துடன் மறுத்த உன்னி, சுவிட்ச் போர்டு அருகே இருந்த லிப்ட் ஆபரேட்டர் நாற்காலியில் அமர்ந்து, அமுதகானம் பொழிய ஆரம்பித்தார். உடனே இறங்க வேண்டிய மாடி வந்துவிட்டது. அனைவரும் உன்னியின் பாட்டிற்கு கைதட்டியவாறே இறங்கினர்.
விருது கொடுப்பதற்கு ஒரு நாளைக்கு முன் ரிஹர்சல் நடக்கும். விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ‘எந்த பக்கம் படியேறி வந்து விருது வாங்கிக் கொண்டு எந்த வழியாக இறங்க வேண்டும்’ என்பதை தெளிவாக சொல்லி விடுவர்.அதிகாரிகள் திரும்ப திரும்ப சொன்ன விஷயம்-, எந்த காரணத்தைக் கொண்டும் ஜனாதிபதியை தொடவே கூடாது.
உடனே நாகேஷ், ‘ஒரு சின்ன சந்தேகம்’ என்றாராம். ‘கேளுங்கள்’ என்று அதிகாரிகள் சொல்ல, ‘ஜனாதிபதி கீழே விழுந்தால் கூட கை கொடுத்து அவரை தூக்கி விடக்கூடாது, அப்படித்தானே’ என்று சொல்ல அனைவரும் சிரித்து விட்டனர். நாகேஷின் நகைச்சுவை உணர்வு, அவர் பேசிய சினிமா வசனங்களால் வந்ததல்ல; அவருடனே பிறந்தது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி!
பதில் சொல்லுங்க வாசகர்களே!
* நிகழ்வு 1ல் குறிப்பிடப்பட்டிருக்கும் நடிகர் யார் என்பதை கண்டறிந்து கமென்ட் செய்து சொல்லுங்க!
* நிகழ்வு 3ல் பாடகர் உன்னிக்கிருஷ்ணனுக்கு அந்த ஆண்டு தேசிய விருது பெற்றுக் கொடுத்த பாடல் எது என்று கமென்ட் செய்து சொல்லுங்க!
– அ.வைத்தியநாதன்

அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.
தொடர்புக்கு: mailto:va****@*******ar.in
