உக்ரைன் மீதான போரை நிறுத்த அமெரிக்கா – ரஷ்யா பேச முடிவு

அபுதாபி: உக்ரைன் மீதான போரை நிறுத்துவது தொடர்பான பேச்சில், அமெரிக்கா – ரஷ்யா ராணுவ அதிகாரிகள் இடையேயான சந்திப்புகளை மீண்டும் தொடர்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் நான்காண்டுகளை எட்டியுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் முத்தரப்பு பேச்சு நடந்தது.

இரண்டாவது நாளாக நேற்றும் பேச்சு தொடர்ந்தது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இரு தரப்பில் இருந்தும் தலா, 157 போர் கைதிகள் பரிமாற்றம் செய்யப்படும். கடந்தாண்டு அக்டோபருக்கு பின் நடைபெறும் மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் இது என்று கூறப்படுகிறது-.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே, 2021ல் நிறுத்தப்பட்ட நேரடி உயர்மட்ட ராணுவ தொடர்பை மீண்டும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போர் பதற்றத்தை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், சில முக்கிய விவகாரங்களில் இன்னும் ஒருமித்த கருத்துக்கள் எட்டப்படாமல் உள்ளன. ரஷ்யா தான் கைப்பற்றிய உக்ரைன் நிலப்பரப்பை திருப்பி வழங்க மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், உக்ரைன் விட்டுக்கொடுக்க மறுக்கிறது.

உக்ரைன் மண்ணில் ஐரோப்பிய படைகள் இருப்பதை ரஷ்யா எதிர்க்கிறது. மீண்டும் தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் என உக்ரைன் கூறுகிறது.

இவ்வாறிருக்க, இரண்டு நாள் பேச்சு ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக இரு தரப்பும் தெரிவித்து உள்ளன.

Source link