வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்க சாத்தியக்கூறுகளை ஆராய அரசு தயார்: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

புதுடில்லி: ”வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான வணிக ரீதியான சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு தயாராக இருக்கிறது,” என, வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டில்லியில், வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எரிசக்தி இறக்குமதி தொடர்பான முடிவுகள், வணிக ரீதியான லாபங்கள் மற்றும் நாட்டின் நீண்ட கால தேவைகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன. எரிசக்தி துறையில் வர்த்தகம், முதலீடு ஆகிய இரண்டிலும், நம் நாட்டின் நீண்ட கால கூட்டாளியாக வெனிசுலா இரு ந்து வருகிறது. 2019- – 20 வரை, நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றா க அந்நாடு இருந்தது.

சர்வதேச தடையால் நிறுத்தப்பட்ட இறக்குமதி, 2023 – -24ல் மீண்டும் துவங்கியது. ஆனால், மீண்டும் தடை விதிக்கப்பட்டதால், வினியோகம் நிறுத்தப்பட்டது. 2008 முதல் நம் நாட்டின் பொதுத் துறை நிறுவனங்கள், வெனிசுலா அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான வணிக ரீதியான சாத்தியக்கூறுகளை ஆராய, மத்திய அரசு தயாராக இருக்கிறது.

நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்வதே முதன்மை கடமை. அனைத்து கொள்முதல் முடிவுகளும், நாட்டின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மையை அடிப்படையாக வைத்தே எடுக்கப்படுகின்றன; அரசியல் அழுத்தங்களுக்கு இடமில்லை.

இறக்குமதி வரியை குறைத்ததற்காக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இதன் மூலம் நம் நாட்டின் தயாரிப்புகள், இனி 18 சதவீத வரி விகிதத்தில் அமெரிக்க சந்தைக்குள் நுழையும். இது, நாட்டின் ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும்; பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link