புதுடில்லி: ” பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி சேர்ந்து மாம்பழத்தை பிழிந்து ஜூஸ் எடுத்து விடாதீர்கள் ” என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியுள்ளார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன்அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. பாமகவின் மாம்பழம் சின்னத்தை அன்புமணிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சிக்குள் பிரச்னை ஏற்பட்டால் சின்னத்தை முடக்கி வைப்பது தான் நடைமுறை. குலுக்கல் முறையில் சின்னத்தை கொடுக்கும் நடைமுறையும் பின்பற்றவில்லை எனத் தெரிவித்தார்.
அன்புமணி தரப்பில், தேர்தல் கமிஷனிடம் இருக்கும் ஆவணங்கள் அடிப்படையில் தங்களது தரப்புக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என விளக்கமளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், ராமதாஸ், அன்புமணி இருவரும் மாம்பழத்தை பிழிந்து ஜூஸ் எடுத்து விடாதீர்கள். விவகாரத்தில் தேர்தல் கமிஷன் பிரெண்ட்லி மேட்ச் ஆடுகிறது எனத் தெரிவித்ததுடன், மாம்பழம் சின்னத்தை கேட்டு சிவில் நீதிமன்றத்தை உடனடியாக நாட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், அந்த மனுவை மூன்றே நாட்களில் விசாரித்து முடிவை எடுக்க வேண்டும் எனவும் சிவில் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
