சென்னை: கோடை விடுமுறையில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஜப்பானிய மொழி பயிற்சி அளிக்க இந்திய – ஜப்பான் தொழில் வர்த்தக சபை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக, அதன் பொதுச்செயலாளர் சுகுணா ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய – ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் மொழிப் பள்ளி, பள்ளி குழந்தைகளுக்கான ஜப்பான் மொழி பயிற்சியைத் தொடங்க உள்ளது. மொத்தம் 40 மணி நேரம் கொண்ட இந்த பயிற்சியில் 8 முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகள் சேரலாம்.
இந்த பயிற்சியானது, ஜப்பானிய மொழி பேச்சுப் பயிற்சி, ஜப்பானிய குழந்தைகளிடமிருந்து பாடங்களை அறிந்து கொள்வது, ஜப்பானிய மொழி எழுதுவது, பாடல்கள் படிப்பது, ஓரிகாமி, ஜப்பானிய விளையாட்டுகள் போன்றவை இடம்பெறும்.இதற்கான நேரடி வகுப்புகள் சென்னை – தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் அமைந்துள்ள இந்திய – ஜப்பான் தொழில் வர்த்தக சபை வளாகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறும். வகுப்புகள் ஏப்ரல் மாதம் தொடங்குகின்றன. பயிற்சியின் நிறைவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்
