நமது டில்லி நிருபர் குஜராத் மாநில முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும், 8,931 நாட்களை கடந்து, சீக்கிம் முதல்வர்

நமது டில்லி நிருபர்

குஜராத் மாநில முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும், 8,931 நாட்களை கடந்து, சீக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்லிங்கின் சாதனையை முறியடித்துள்ள மோடிக்கு, டில்லி சட்டசபையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குஜராத் மாநில முதல்வராக, 2002 அக்டோபர் 7 முதல், பொறுப்பு வகித்த பிரதமர் மோடி, 2014 மே 26 வரை, அந்த பொறுப்பில் இருந்தார். அதன் பின், நாட்டின் பிரதமராக விளங்கும் அவர், இதுவரை அந்த பதவியில் தொடர்ந்து இருக்கிறார். இதன் மூலம், 8,931 நாட்கள் பொது வாழ்க்கையில் இருந்தவர் என்ற பெருமையை, பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

டில்லி சட்டசபையில் இன்று ( மார்ச் 23) அவருக்கு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது: இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் பிரதமர் மோடியை பாராட்டுகிறேன். டில்லி மாநில மக்கள் சார்பில், அவரை நான் வாழ்த்துகிறேன். ஆட்சி, அதிகாரத்தில் பல அம்சங்களை அவர் மாற்றியுள்ளார்.

தினமும், 24 மணி நேரமும், 365 நாட்களும் அவர் இந்த நாட்டிற்காக, ஓய்வே இல்லாமல் பாடுபடுகிறார். அவரின் வெளிநாட்டு கொள்கை, சிறப்பான நிர்வாகத்தை எண்ணி, நாங்கள் வெகுவாக மகிழ்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் மோடியை பாராட்டும் தீர்மானத்தை, டில்லி சட்டசபையில் தீர்மானமாக கொண்டு வந்தார், மாநில உள்துறை அமைச்சர் ஆஷிஸ் சூட். அந்த மசோதா பின் நிறைவேற்றப்பட்டது.

அப்போது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஸ் சாஹிப் சிங் பேசும் போது,”இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக, குறிக்கோளுடன் செயல்படும் பிரதமர் மோடியை பாராடுகிறேன். ஒரு நகரம், ஒரு மாநிலம் மட்டும் முன்னேறினால் போதாது என கருதி, ஒட்டுமொத்த நாடே முன்னேற வேண்டும் என்ற இலக்குடன் பிரதமர் மோடி பாடுபடுகிறார்,” என்றார்.

Source link