சண்டிகர்: பஞ்சாபில், அரசு அதிகாரி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக, ஆம் ஆத்மியின் முன்னாள் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தார்ன் தரன் மாவட்டத்தின், பட்டி தொகுதி எம்.எல்.ஏ.,வான லால்ஜித் சிங் புல்லர், மாநில அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் சிறைத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
சமீபத்தில், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அரசு கிடங்கு கழகத்தின் மாவட்ட மேலாளர் ககன்தீப் சிங் ரந்தாவா என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
உயிரிழப்பதற்கு முன் அவர் வெளியிட்ட, ‘வீடியோ’வில், ‘என் தற்கொலைக்கு அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் தான் காரணம்’ என, குறிப்பிட்டிருந்தார். இது, பஞ்சாப் அரசியலில் புயலை கிளப்பியது.
இதைத்தொடர்ந்து லால்ஜித் சிங் புல்லர், தன் அமைச்சர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, ரந்தாவாவின் மனைவி உபேந்தர் கவுர், தன் கணவரின் இறப்புக்கு காரணமான லால்ஜித் சிங் புல்லர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், ‘கிடங்கு ஒதுக்கீடு தொடர்பான ஒரு ஒப்பந்தத்தை தன் தந்தை சுக்தேவ் சிங்கிற்கு வழங்கும்படி அமைச்சர் லால்ஜித் சிங் என் கணவருக்கு அழுத்தம் கொடுத்தார். அந்த ஒப்பந்தத்தை வழங்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினார்’ என, குறிப்பிட்டுஇருந்தார்.
இதன்படி, முன்னாள் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர், அவரது தந்தை மற்றும் உதவியாளர் ஆகியோர் மீது பஞ்சாப் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எனினும், லால்ஜித் சிங்கை கைது செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்தி வந்தனர்.
இதையடுத்து, 24 மணி நேரத்திற்குள் அவரை கைது செய்யவில்லை எனில், தன் குழந்தைகளுடன் வீதிக்கு வந்து போராடுவேன் எனவும் அதுவரை அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனவும், உயிரிழந்த ரந்தாவாவின் மனைவி உபேந்தர் கவுர் தெரிவித்திருந்தார்.
இதேபோல் சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். தொடர் அழுத்தங்கள் காரணமாக, முன்னாள் அமைச்சர் லால்ஜித் சிங்கை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
