புதுடில்லி: கொல்கட்டா மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமானப் பணிகளில் முட்டுக்கட்டை போடுவதாக, மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம் தெரிவித்தது. பொதுமக்களுக்கு பயனளிக்கும் ஒரு வளர்ச்சித் திட்டத்தை தேவையில்லாமல் அரசியலாக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்., 23 மற்றும் 29ல் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
தலைநகர் கொல்கட்டாவில், சால்ட் லேக் பகுதியில் உள்ள செக்டார் 5 என்ற இடத்தையும், தெற்கு கொல்கட்டாவையும் இணைக்கும் வகையில், மெட்ரோ வழித்தட கட்டுமானப் பணி நடக்கிறது.
மேல்முறையீடு
‘சிங்ரிகாட்டா’ சந்திப்பில் கட்டுமானப் பணிகளில் நீண்ட காலமாக முட்டுக்கட்டை நிலவுவதாகவும், பணியை விரைந்து முடிக்கக் கோரியும் கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பணியில் ஏற்பட்ட தாமதத்துக்கு கவலை தெரிவித்ததுடன், பிப்., 15க்குள் பணிகளை முடிக்க, கடந்த ஆண்டு டிச., 23ல் உத்தரவிட்டது. மேலும், சாலைகளை அடைத்து பணியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ‘கட்டுமானப் பணிகளுக்காக சாலைகள் அடைக்கப்பட்டால் ஆம்புலன்ஸ், அவசர ஊர்திகள் செல்ல முடியாது. உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மே மாதம் வரை அவகாசம் வேண்டும்’ என, குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் பள்ளி பொதுத் தேர்வுகளால் கட்டுமானப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.
அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில், கடந்த ஆண்டு டிச., 23ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது முதல் இந்த உத்தரவை நிறைவேற்ற மாநில அரசுக்கு தடையாக இருந்தது எது?’ என, கேள்வி எழுப்பினர்.
ஏற்க முடியாது
இதன்பின், அமர்வு உத்தரவிட்டதாவது: மேற்கு வங்க அரசுக்கு ஏற்றபடியே கொல்கட்டா உயர் நீதிமன்றம் மிகவும் தாராளமாக நடந்து கொண்டுள்ளது. மாநில தலைமை செயலர், போலீஸ் டி.ஜி.பி., மற்றும் பிற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய தகுதியான வழக்கு இது.
அரசியலமைப்பு கடமையை ஆற்ற அனைவரும் தவறி விட்டனர். பொறுப்புகளை தட்டிக் கழித்துள்ளனர். இது தேவையற்ற ஒரு விவகாரத்தை அரசியலாக்கும் முயற்சி. பொதுமக்களுக்கு பயனளிக்கும் ஒரு வளர்ச்சித் திட்டத்தை மாநில அரசு அரசியலாக்குவதை நாங்கள் விரும்பவில்லை.
நாம் எல்லாவற்றையும் அரசியலாக்கக் கூடாது. இது வளர்ச்சி சார்ந்த விஷயம். இது பொதுமக்களுக்கான திட்டம். இதில் முட்டுக்கட்டைகளை உருவாக்க வேண்டாம். ஏற்கனவே நடக்கும் மற்றும் உயர் நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் இந்த வளர்ச்சித் திட்டத்திற்கு தேர்தல் கமிஷன் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.
பண்டிகைகளை கவனிக்க வேண்டும் என, மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. போக்குவரத்து வசதியை உருவாக்குவதை விட பண்டிகை தான் முக்கியமா? இது உங்கள் விருப்பம் அல்ல, கடமை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, நீதிமன்ற கதவை தட்டி இத்திட்டத்தை புறக் கணிக்க கோருவதை ஏற்க முடியாது.
தேர்தல் கமிஷனுக்கு இதில் எந்த பிரச்னையும் இருக்காது. இது தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதற்கு முன்பே துவங்கப்பட்ட திட்டம். வளர்ச்சியைத் தடுக்க இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது.
தள்ளுபடி
அதிகாரிகளின் பிடிவாதமான போக்கையே இது காட்டுகிறது. அவர்கள் கொல்கட்டா மெட்ரோ ரயில் திட்டத்தை தாமதப்படுத்தவும், முடக்கவும் விரும்புகின்றனர். உயர் நீதிமன்ற உத்தரவில் எந்த தவறும் இல்லை.
இத்திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். எனவே, மேற்கு வங்க அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளை கொல்கட்டா உயர் நீதிமன்றம் கண்காணிக்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.
