விஜய் நம்பிக்கைக்குரியவராக தெரியவில்லை: பீயூஷ் கோயல்

சென்னை: ‘த.வெ.க., தலைவர் விஜய் அடிக்கடி மாற்றி பேசுகிறார்; நம்பிக்கைக்குஉரிய நபராக தெரியவில்லை’ என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் கூறியுள்ளார்.

பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க., தலைவர் விஜயை சேர்க்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர முயற்சி மேற்கொண்டார்; இதற்காக நேரடியாகவும், தன் மகன் ஜெய் ஷா, மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் மற்றும் தனக்கு நெருக்கமானவர்கள் வாயிலாகவும் பேச்சு நடத்தினார்.

சமீபத்தில் திரைப்பட இயக்குநர் அட்லீ வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கவும், ஜனநாயகன் பட வெளியீடு தொடர்பாக பேசவும், விஜய் மும்பைக்கு சென்றதாக தகவல் வெளியானது. ஆனால், அங்கு அவர், மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலை சந்தித்துள்ளார்.

அப்போது விஜயுடன் நடந்த பேச்சு குறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம் பேசிய பீயூஷ் கோயல், ‘என் சொந்த ஊரான மும்பையில் விஜயை அழைத்து பேசி, எத்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்பது பற்றி தெரிவிக்கப்பட்டது.

‘அதை விட அதிகமாக கேட்பது அல்லது கூட்டணிக்கு வருவது, வராதது பற்றி விஜய் பேசி இருக்க வேண்டும். ‘ஆனால், சம்பந்தம் இல்லாத விபரங்களையே விஜய் தெரிவித்தார். தான் பேசியதையே, அவர் அடிக்கடி மாற்றி மாற்றி பேசுகிறார். அவர், நமக்கு நம்பிக்கைக்குரிய நபராக தெரியவில்லை. அவர், கூட்டணிக்கு வராவிட்டாலும், தே.ஜ., கூட்டணி பலமாக உள்ளது’ என தெரிவித்துள்ளார். இவ்வாறு அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

Source link