ஆர்லியன்ஸ்: ஆர்லியன்ஸ் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்திய வீராங்கனைகள் தன்வி சர்மா, இஷாராணி முன்னேறினர்.
பிரான்சில், ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தன்வி சர்மா, ஜப்பானின் நாட்சுகி நிடைரா மோதினர். மொத்தம் 43 நிமிடம் நீடித்த போட்டியில் தன்வி சர்மா 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், இஷாராணி மோதினர். இதில் இஷாராணி 21-9, 15-7 என முன்னிலையில் இருந்த போது மாளவிகா காயத்தால் பாதியில் விலகினார். இஷாராணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஹரிகரன், அர்ஜுன் ஜோடி 12-21, 20-22 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் லியோ ரோலி கார்னன்டோ, பகாஸ் மவுலானா ஜோடியிடம் தோல்வியடைந்தது.
