சத்தமில்லாமல் சொத்து வரியை 100 % உயர்த்திய தமிழக அரசு

சென்னை : கணக்கீட்டு குளறுபடி காரணமாக, கிராமங்களில் வீடுகளுக்கான சொத்து வரி, 100 சதவீதம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக, பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பிரதான நிதி ஆதாரமாக, சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும், அந்தந்த பகுதியின் வாடகை வருவாய் நிலவரம் அடிப்படையில், சொத்து வரிக்கான புள்ளிகளை கணக்கிடும்.

இந்நிலையில், நிர்வாக நடைமுறை வசதிக்காக என்ற அடிப்படையில், ஊரக பகுதிகளில் வீட்டு வரி என்பதை சொத்து வரியாக மாற்றி, தமிழக அரசு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. ஆரம்பத்தில், இது வெறும் பெயர் மாற்றம் என்று தான் அனைவரும் நினைத்தனர்.

ஆனால், கிராமங்களில் வீட்டு வரி என்பதற்கு பதிலாக, தற்போது சொத்து வரி வசூலிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இதில், நகரங்களில் உள்ளது போன்று, கணக்கீட்டு வழிமுறை வகுக்கப் படவில்லை. இதுவரை, சென்ட், ஏர்ஸ் கணக்கில் சொத்துக்களுக்கு வரி விதிக்கப்பட்டு வந்தது.

இதில், வீடுகளுக்கு பெயரளவுக்கு மட்டுமே தொகை நிர்ணயிக்கப்பட்டு வந்தது. தற்போது, சொத்து வரி என்ற அடிப்படையில் குடியிருப்பு, வணிக பயன்பாட்டில் உள்ள நிலங்களுக்கு சொத்து வரி கணக்கிடப் படுகிறது.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஊரக பகுதிகளில் வீடு, கடைகளுக்கு குறைந்தபட்சம் என்ற அடிப்படையில் சதுரடிக்கு, 1 ரூபாய் என்ற அடிப்படையிலேயே சொத்து வரி கணக்கிடப்படுகிறது. ஆனால், பல்வேறு இடங்களில் சதுரடிக்கான தொகை, 1 ரூபாயில் இருந்து, 5 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

வாடகை வருவாய் அடிப்படையிலான வழிமுறை எதையும் கடைப் பிடிக்காமல், சதுர அடிக்கு 1 முதல், 5 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வீட்டு வரியாக 50 ரூபாய் செலுத்தியவர்கள், 500 முதல், 5,000 ரூபாய் வரை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதால், வீட்டு வரியாக செலுத்திய பழைய தொகையை விட, 100 சதவீதத்துக்கு மேலாக சொத்து வரியாக செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டு வரியை செலுத்தச் சென்றவர்களுக்கு தான் இந்த விபரம் தெரிகிறது. மற்றவர்களுக்கு இந்த விபரம் இன்னும் தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link